சென்னை – “ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்” என்ற பழமொழி நம்மிடையே புழக்கத்தில் இருந்து வருகிறது. சென்னை வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் இது போன்ற சமயத்தில், வாட்சாப் விஷமிகளுக்குத் தான் மேற்கூறிய பழமொழி சரியாகப் பொருந்தும்.
வெள்ளத்திற்கும், வீடுகளின் விரிசலுக்கும் சென்னைவாசிகள் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், கிழக்குக் கடற்கரை சாலையில் இருக்கும் முதலைப் பண்ணைகளில் இருந்து 40 முதலைகள் தப்பித்து விட்டதாகவும், அவை வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதியில் சுற்றித் திரிவதாகவும் சமீபத்தில் நட்பு ஊடகங்களில் முதலையின் புகைப்படத்துடன் செய்திகள் பரவின.
அந்த புகைப்படத்தில், வெள்ளத்தில் இருக்கும் முதலையை பார்க்கும் போது ஏற்கனவே ஆபத்தில் இருக்கும் அப்பாவி மக்கள் பலரும் கண்டிப்பாக அஞ்ச நேரிடும். அடிப்படையான மனிதாபிமானம் கூட இல்லாத சிலர், பரப்பிய இந்த செய்தி, தற்போது காட்டுத் தீ போல் பரவி வருகிறது. இது தொடர்பாக குறிப்பிட்ட அந்த முதலைப் பண்ணைக்கு தற்போதய நிலையில் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ள முடியாது நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் அறிந்தவுடன் மெட்ராஸ் முதலைப் பண்ணை அமைப்பு (Madras Crocodile Bank Trust) உடனடியாக மறுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. மேற்கூறிய செய்தி வீண் வதந்தி என்றும், முதலைகள் வெளிவர முடியாத அளவிற்கு தங்களின் பாதுகாப்பு நடவடிக்கை எப்போதும் சிறந்ததாகவே இருக்கும் என்றும் அப்பணையின் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
சென்னை வாசிகளின் சார்பாக, வாட்சாப் பயனர்களுக்கு நாம் தெரிவிப்பது எல்லாம் ஒன்று தான், இது போன்ற அச்சுறுத்தும் செய்திகளை பகிர்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என்பது தான்.
இன்று முதலைகள் குறித்து பரவி உள்ள வதந்தி தொடர்ந்தால், நாளை வண்டலூர் சரணாலயத்தில் இருந்து, உடைந்த சுவர் வழியாக சிங்கமும், புலியும் தப்பித்ததாகவும், அவை மனிதர்களை அடித்துக் கொன்றதாகவும் ஏதோ ஒரு புகைப்படத்துடன் வதந்திகள் வெளியாகலாம். எனவே உங்களின் ‘ஃபார்வர்ட்’ (Forward) பொத்தானை அழுத்துவதற்கு முன் பலமுறை யோசியுங்கள்.
– சுரேஷ்