Home Featured தமிழ் நாடு பேரிடர் வந்தால் ஏன் நடிகர்களை எதிர்பார்க்கிறீர்கள்? அரசு என்ன செய்கிறது?

பேரிடர் வந்தால் ஏன் நடிகர்களை எதிர்பார்க்கிறீர்கள்? அரசு என்ன செய்கிறது?

536
0
SHARE
Ad

Kamalhassanசென்னை – சென்னை வெள்ளத்தைக் கண்டு கொதித்தெழுந்த நடிகர் கமல்ஹாசன், கோபத்தில் அரசுக்கு எதிராக கனமழையைக் காட்டிலும் வேகமாக வார்த்தைகளைக் கொட்டித் தீர்த்திருக்கிறார்.

அவரது அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

“ஒரு பாதுகாப்பான அறையில் அமர்ந்து கொண்டு என் சக சென்னை மக்கள் மழையிலும் வெள்ளத்திலும் அவதிப்படுவதை ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன். உண்மையில் எனக்கு இப்படி இருப்பது வெட்கமாக இருக்கிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கே இந்த நிலைமை என்றால் பிற பகுதிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை”

#TamilSchoolmychoice

“அரசாங்கத்தின் ஒட்டுமொத்த நிர்வாகமும் சீர்குலைந்து போய்க் கிடக்கிறது, மழை நின்றாலும் சென்னை இதிலிருந்து மீண்டு வர பல மாதங்கள் ஆகலாம். மக்களின் வரிப்பணம் எங்கு தான் செல்கிறது எனத் தெரியவில்லை. நான் கருப்புப் பணம் வைத்திருப்பவன் அல்ல, ஒழுங்காக வரி கட்டுபவன். நான் உழைத்துச் சம்பாதித்துக் கட்டிய வரிப்பணம் உரியவர்களுக்குப் போய்ச் சேர்வதில்லை என நன்றாகத் தெரிகிறது.”

“எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை, தங்களைக் கடவுளாக அறிவித்துக்கொண்ட ஆட்சியாளர்களின் முடிவுகள் மீதும் நம்பிக்கை இல்லை. யார் ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, கார்ப்ரேட் திட்டங்களுக்கு ரூ.4000 கோடி செலவழிக்கிறார்களே, அதை 120 கோடி மக்களுக்குப் பிரித்துக்கொடுத்தால் அனைவரும் கோடிஸ்வர்கள்தானே.”

“இது போன்ற அசாதாரண நிகழ்வுகள் ஏற்பட்டால் உடனே எங்களைப் போன்றவர்களிடம் இருந்து பொருளாதார உதவிகளை அரசு எதிர்பார்க்கிறது. ஆனால் அதற்காகத்தான் அரசை நாம் நியமித்துள்ளோம் என்பதை மறந்துவிடுகின்றனர். அரசோடு ஒப்பிடுகையில் நான் குறைவாகவே சம்பாதித்தாலும், கொடுக்க வேண்டியது என் கடமை என்பதும் எனக்குத் தெரியும். கண்டிப்பாக நான் நிதியளிப்பேன் ஆனால் அது மக்களின் இரத்தத்தை உறிஞ்சிய பணக்காரனின் பணம் அல்ல. மக்களை உண்மையாகவே நேசிக்கும் ஒருவனின் பணம். அரசு எல்லோரையும் ஒன்றாக நடத்தினால் ஏழை, பணக்காரன் பேதம் ஒழிந்து போகும்” என்று கமல்ஹாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இது போன்ற பேரிடர்கள் வரும் சமயங்களில் நிவாரண நிதி என்ற பெயரில் மக்கள்  நடிகர்களை எதிர்பார்ப்பது இன்று நேற்று நடப்பது அல்ல.

ஒரு நடிகர் நிதி உதவி செய்கிறார் என்றால், அதே அந்தஸ்தில் இருக்கும் மற்ற நடிகர்களிடமும் அது போன்ற ஒரு நிதியுதவியை எதிர்பார்ப்பதும், அவர்கள் குறைவாக நிதியளித்தால் உடனே அவருக்கு எதிராக கோஷங்கள் இடுவதும் அவர்களுக்கு ஒரு வித நெருக்கடியை உண்டாக்கவே செய்யும்.

அப்படி ஒரு நெருக்கடியின் வெளிப்பாடாகவே கமல்ஹாசனின் கோபம் தோன்றுகிறது.