கோலாலம்பூர் – பசி, அசதி மற்றும் கையில் காசு இல்லாத நிலை ஆகிய துன்பங்களையெல்லாம் ஒரு வழியாகக் கடந்து சென்னையில் பல் மருத்துவம் படித்துக் கொண்டிருந்த 4 மலேசிய மாணவிகள் நேற்று கோலாலம்பூர் வந்தடைந்தனர்.
சென்னை நகரம் முழுவதும் சூழ்ந்திருக்கும் வெள்ளத்தில் எப்படியோ தப்பிப் பிழைத்து, சுமார் 400 கிலோமீட்டர் பயணம் செய்து பெங்களூரை அடைந்த பிரியா தர்ஷினி (வயது 20), அவரது சகோதரி பிரீத்தா (வயது 20), கிறிஸ்டின் திங் (வயது 21), யுகாஸ்ரீ உலகநாதன் (19) ஆகிய நால்வரும்,அங்கிருந்து விமானம் மூலம் நேற்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்து சேர்ந்தனர்.
இன்னும் 30-க்கும் மேற்பட்ட மலேசிய மாணவர்கள் தங்களது விடுதியில் சிக்கிக் கொண்டிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
“அவர்கள் அச்சத்தில் வெளியேறாமல் உள்ளனர்” என்று பிரியா தெரிவித்துள்ளார்.
அவர்களை மலேசியத் தூதரகம் விரைவில் மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்றும், நிலைமை அங்கு மிக மோசமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
படம்: நன்றி ஸ்டார்.