Home Featured நாடு ஒரு புகைப்படத்தால் – நாடாளுமன்ற பதவியை இழப்பாரா நூருல் இசா?

ஒரு புகைப்படத்தால் – நாடாளுமன்ற பதவியை இழப்பாரா நூருல் இசா?

792
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அரசியலில் ஒரே சம்பவம் ஒருவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்று நிறுத்தும். அதேபோல இன்னொரு சம்பவத்தால் ஒருவர் அதலப் பாதாளத்தில் வீழ்வதும் சாத்தியம்தான்!

ஒரே ஒரே ஒரு புகைப்படத்தால் தனது வாழ்க்கை இப்படித் தலைகீழாக மாறும் என லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினரும், பிகேஆர் கட்சியின் உதவித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் மகளுமான நூருல் இசா கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.

Nurulசூலு சுல்தான் மகளுடன் எடுத்துக் கொண்ட அந்தப் புகைப்படத்தின் காரணமாக, நேற்று உச்சகட்ட தாக்குதலாக நேற்று மலேசிய நாடாளுமன்றம் அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க  வாக்களித்துள்ளது.

#TamilSchoolmychoice

கண்ணீருடன் நூருல் இசா…

2013இல் சபா மீது தாக்குதல் தொடுத்த சூலு சுல்தானின் மகளுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதற்காக, தனது நாடாளுமன்ற சத்தியப் பிரமாணத்திற்கு எதிராக, நாட்டின் அரசியல் சாசனத்திற்கு புறம்பாக நடந்து கொண்டார், நாட்டைப் பாதுகாக்கத் தவறினார் என்ற காரணங்களைக் காட்டி அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவரை நாடாளுமன்ற உரிமைகள் மற்றும் சலுகைகளுக்கான துணைக் குழுவுக்கு பரிந்துரை செய்யும் தீர்மானம் ஒன்று நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்த தீர்மானத்தின் வாக்களிப்பு நிறைவேறுவதை கண்ணீருடன் கவனித்துக் கொண்டிருந்தார் நூருல் இசா.

தீர்மானத்திற்கு ஆதரவாக 105 உறுப்பினர்களும் எதிராக 77 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர்.

முன்னதாக, அந்தப் புகைப்படம் எந்த சூழ்நிலையில் எடுக்கப்பட்டது, ஏன் எடுக்கப்பட்டது என்ற விவரங்களை நூருல் இசா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அன்வாரின் விடுதலைக்கான போராட்டத்தின் விளைவுதான் புகைப்படம்

அன்வாரின் விடுதலைக்காக ஆதரவு தெரிவித்துப் போராடும் பிலிப்பைன்ஸ் குழுவொன்று மணிலாவில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அங்குள்ளவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும், அந்தக் கூட்டத்தில்தான் ஜேசல் கிராம் கலந்து கொண்டதாகவும் நூருல் தனது நாடாளுமன்ற உரையில் குறிப்பிட்டார்.

nurul-izzahஇது ஒரு எதிர்பாராத சந்திப்பு என்றும் முன்கூட்டியே ஜேசல் கிராமைச் சந்திக்கத் தான் முன்கூட்டியே திட்டமிடவில்லை என்றும் நூருல் வலியுறுத்தினார்.

தனது செய்கைக்காக தான் வருந்துவதாகவும், சூலு சுல்தான் தாக்குதலால் பாதிப்படைந்த குடும்பங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், நூருல் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, சபா சட்டமன்றம் நூருல் அந்த மாநிலத்திற்குள் நுழையக் கூடாது எனத் தடைவிதித்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

தொடர்ந்து இந்தப் புகைப்பட சர்ச்சை தொடர்பாக காவல் துறையில் தனது விளக்கங்களை நூருல் இசா அளித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து நூருல் மீது நாடாளுமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையே இழப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அதே வேளையில், இந்த சம்பவம் மூலம் நாடு முழுமையிலும் உள்ள மக்களின் பார்வை நூருல் இசா மீது பதிந்துள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும்.

2.6 பில்லியன் சொந்த வங்கிக் கணக்கில் வந்ததற்கே காரணம் சொல்ல யாருமே முன்வராத பட்சத்தில்,

ஒரு புகைப்படத்திற்காக ஒரு பெண்ணின் மீது இத்தனை கண்டனங்களா – இத்தனை தாக்குதல்களா – என்ற ரீதியில் நூருலுக்கு நாடு முழுமையிலும் அனுதாப அலை பெருகி வருகின்றது என்பதையும் மறுக்க முடியாது.

-செல்லியல் தொகுப்பு