செம்பூர்ணா (சபா) – அம்னோ உதவித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டத்தோ ஷாபி அப்டால் தனது நாடாளுமன்றத் தொகுதியான செம்பூர்ணாவுக்கு நேற்று வருகை மேற்கொண்ட போது, படகில் ஏறுவதற்காக மரப் பலகைகளிலான படகுத் துறையில் தவறி கடலுக்குள் விழுந்தார்.
இருப்பினும் எந்தவித காயங்களும் இன்றி அவர் உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து, பேஸ்புக் பக்கங்களில் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஷாபி அப்டால் கடலில் தவறி விழுந்த சம்பவம் பேஸ்புக் பக்கங்களில் நேற்று பகிர்ந்து கொள்ளப்பட்டது…
ஷாபி அப்டால், மரப்பலகைகளால் ஆன பாலம் போன்ற படகுத் துறையில் ஒரு படகுக்குள் ஏறுவதற்காக, நடந்து சென்றபோது, அந்தப் பலகைகள் உடைந்து, அதன் காரணமாக அவர் கடலுக்குள் விழுந்திருக்கின்றார்.
இடுப்பளவு நீருக்குள் விழுந்த ஷாபிக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தனது தொகுதியான செம்பூர்ணாவுக்கு நேற்று ஷாபி வந்திருந்தார்.
“அவர் நலமாக இருக்கின்றார். இன்று கோலாலம்பூர், கம்போங் பாருவில் முன்னாள் துணைப் பிரதமர் மொகிதின் யாசின் கலந்துகொள்ளவிருக்கும் சந்திப்பு நிகழ்ச்சியில் ஷாபியும் கலந்து கொள்வார்” என அவரது உதவியாளர் குறிப்பிட்டதாக, மலேசியகினி இணைய செய்தித் தளம் தெரிவித்துள்ளது.