லண்டன் – கிழக்கு லண்டன் பகுதியில் உள்ள லெயிட்டன்ஸ்டோன் இரயில் நிலையத்தில், உள்நாட்டு நேரப்படி நேற்று முன்தினம் மாலை 7.00 மணியளவில் மர்ம மனிதன் ஒருவன் அங்கு கூடியிருந்த பயணிகளை நோக்கி கத்தியால் தாக்கினான். இந்த சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவனை கைது செய்தனர்.
இந்த சம்பவம் நடந்த பகுதியில் இருந்த பயணிகள் இது பற்றி கூறுகையில், “கத்தியால் தாக்குதல் நடத்திய அவன், ‘இது சிரியாவிற்காக’ என்று கத்திக் கொண்டே தாக்கத் தொடங்கினான்” என்று தெரிவித்துள்ளனர்.
சிரியாவில், ஐஎஸ் தீவிரவாதிகளின் எண்ணெய் கிணறுகளை, இங்கிலாந்து, போர் விமானங்கள் கொண்டு தாக்கி வரும் நிலையில், இந்த சம்பவ ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பிரான்சிலும், ஐஎஸ் இயக்கத்திற்கு எதிராக அந்நாடு தாக்குதல் நடத்தத் தொடங்கியது முதல், மிகப் பெரும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், லண்டனிலும் அதே போன்ற அச்சறுத்தல்கள் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.