கோலாலம்பூர் – “நான் பிரச்சனைகள் குறித்து பேசிக் கொண்டே தான் இருப்பேன் காரணம் நான் யாருக்காக சேவையாற்றிக் கொண்டிருக்கிறேனோ அவர்கள் எனது கல்லறையில் வந்து சிறுநீர் கழித்து அசுத்தம் செய்து விடக்கூடாது” என்று அம்னோ உதவித் தலைவர் ஷாபி அப்தால் கூறியுள்ளார்.
பதவி நீக்கம் செய்யப்பட்டதால், டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மற்றும் முன்னாள் பிரதமர் மகாதீருடன் கூட்டணி சேர்ந்துள்ள அவரிடம், அரசாங்கத்தில் பதவி இழந்ததால் ஏற்பட்டிருக்கும் அதிருப்தி குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,
“நான் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி. நான் எனக்காக பிரதிநிதிக்கவில்லை இல்லையென்றால் எனது வாயை மூடிக் கொண்டு என்னுடைய பதவியைத் தொடருவேன். ஆனால் நான் அமைதியாக இருக்க முடியாது. காரணம் மக்களுக்கு நிறைய கேள்விகள் உள்ளன.” என்று ஷாபி தெரிவித்துள்ளார்.
“நான் இறந்த பிறகு எனது கல்லறையில் அவர்கள் சிறுநீர் கழித்து, இந்த செம்பூர்ணா நாடாளுமன்ற உறுப்பினர் என்ன மாதிரியான மனுஷன் யா? மக்களுக்கோ அல்லது நாட்டுக்கோ எதுவுமே செய்யவில்லை என்று கூறிவிடக் கூடாது” என்று ஷாபி கூறியுள்ளார்.
பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் 1எம்டிபி விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்ததால், சஃபி மற்றும் மொகிதின் யாசின் இருவரும் கடந்த ஜூலை மாதம் அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.