Home நாடு செல்லியல் பார்வை : சைட் சாதிக், ஷாபி அப்டாலுடன் கூட்டணி – அவசரப்பட்டு எடுத்த தவறான...

செல்லியல் பார்வை : சைட் சாதிக், ஷாபி அப்டாலுடன் கூட்டணி – அவசரப்பட்டு எடுத்த தவறான முடிவா?

665
0
SHARE
Ad
மூடா-வாரிசான் சபா கூட்டணி அறிவிப்பின்போது சைட் சாதிக், ஷாபி அப்டால்

(ஷாபி அப்டாலின் வாரிசான் சபா கட்சியுடன் கூட்டணி அமைப்பதாக அண்மையில் அறிவித்திருக்கிறார் மூடா கட்சியின் தலைவர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான். இது அவசரப்பட்டு எடுத்த தவறான வியூகமா? பொதுத் தேர்தலில் இதனால் சாதகங்கள் விளையுமா? விவாதிக்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

மிகக் குறுகிய காலத்தில், மிக இளம் வயதில் மலேசிய அரசியலில் மிகப் பெரிய பிரபலத்தையும் அரசியல் செல்வாக்கையும் அடைந்தவர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான்.

முதல் தவணை மூவார் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடனேயே நேரடியாக அமைச்சராக நியமிக்கப்பட்டவர்.

#TamilSchoolmychoice

நாடு தழுவிய அளவில் இளைஞர்களிடையே மிகுந்த நம்பிக்கையையும், ஆதரவையும் பெற்றிருப்பவர்.

ஆனால்,  அத்தகைய நம்பிக்கைகளையும் , உற்சாகம் கலந்த எதிர்பார்ப்புகளையும், ஒரே நாளில் நீரூற்றி அணைக்கும் வண்ணம் வெளியானது சையிட் சாதிக், சபா  வாரிசான் கட்சியின் தலைவர் ஷாபி அப்டாலுடன் கூட்டணி அமைக்கிறார் என்ற செய்தி.

சையிட் சாதிக் அப்துல் ரஹ்மானின் மூடா கட்சியை உள்துறை அமைச்சும், சங்கப் பதிவிலாகாவும் 14 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் என்ற அதிரடி தீர்ப்பை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம்  அண்மையில் வழங்கியது.

இந்த தீர்ப்புக்கு எதிராக  அரசாங்கம் மேல்முறையீடு செய்யாது என உள்துறை அமைச்சர் டத்தோ ஹம்சா சைனுடினும் கடந்த திங்கட்கிழமை (டிசம்பர் 20) தெரிவித்திருக்கிறார்.

மூடா கட்சிக்கு சாதகமானத் தீர்ப்பைத் தொடர்ந்து நாடு முழுமையிலுமுள்ள இளம் வாக்காளர்களிடையே ஒரு புதிய எழுச்சியும் உற்சாகமும்  எழுந்தது என்பதையும்  மறுப்பதற்கில்லை.

டிசம்பர் 15ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் வாக்காளர்களாக பதிந்து கொள்ளப்படுவர் என்ற அரசாங்கத்தின் முடிவு, மூடா கட்சியின் பதிவுக்கு நீதிமன்றம் ஆதரவு என எல்லாம் சேர்ந்து மலேசிய இளம் தலைமுறையினரிடையே மூடா மீதான அரசியல் ஆர்வம் அதிகரித்தது.

அண்மையில் மக்கள் ஓசை நாளிதழுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் பிரபல வழக்கறிஞரும் சமூகப் போராளியுமான டத்தோ அம்பிகா சீனிவாசன் இனிவரும் காலத்தில் மூடா கட்சி மலேசிய அரசியலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

அவசரப்பட்டு எடுத்த தவறான முடிவா?

இத்தகைய சாதகமான – ஆதரவு அலைகளுக்கு மத்தியில் ஷாபி அப்டாலுடன் கூட்டணி அமைத்தது, சையிட் சாதிக் அவசரப்பட்டு எடுத்த தவறான வியூகம் என்ற விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

சையிட் சாதிக்குக்கு தற்போது இருக்கும் மிகப் பெரிய சவால் அவர் மீதான பெர்சத்து கட்சி பணம் கையாடல் என்ற குற்றச்சாட்டிலிருந்து அவர் எப்படி மீண்டு வரப் போகிறார் என்பதுதான்.

மலேசியா அரசியலில்  இளமையும் புதிய சிந்தனைகளும் பல இன சார்பற்ற அரசியல் வியூகத்தையும்  கொண்ட சையிட் சாதிக், ஷாபி அப்டாலுடன் இணைந்ததால்  மலேசிய அரசியல் அரங்கில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், இதனால் உண்மையிலேயே சையிட் சாதிக்குக்கு அரசியல் ரீதியாக பயன் விளையுமா என்றால் இல்லை என்றே தோன்றுகிறது!

காரணம், ஷாபி அப்டால், சையிட் சாதிக் போன்று ஒரு நேர்மையான, தூய்மையான அரசியல் பயணத்தைக் கொண்டவர் இல்லை.

மலாய்க்காரர்களை மட்டும் உறுப்பினராகக் கொண்ட அம்னோவில் சபா மாநிலப் பிரதிநிதியாக, உதவித் தலைவராக  உயர்ந்தவர் ஷாபி அப்டால்.

அவர் அமைச்சராக இருந்தபோது, சபாவிலும் தேசிய அளவிலும்  அம்னோ சார்பு அரசியலைத்தான் அவர் முன்னெடுத்தார்.

1எம்டிபி விவகாரத்தில் முஹிடினுடன் இணைந்து நஜிப்புக்கு எதிராக  அவர் குரல் கொடுத்த காரணத்தால்தான் அம்னோவிலிருந்து  நீக்கப்பட்டார்.

அதன் பின்னரே,  அவர் சபா அரசியலில்  பல இன அரசியலை முன்னெடுத்தார்.

அம்னோவில் இன்னும் தொடர்ந்து இருந்தால், அவர் இப்போதும் மலாய்– முஸ்லிம் சார்ந்த அரசியலைத்தான் முன்னெடுத்திருப்பார்.

சபா அரசியலில்  மேற்கு மலேசியா அரசியல் கட்சிகள் தலையிடக் கூடாது. மாநில அரசியலை நாங்களே பார்த்துக் கொள்வோம் என்ற ஆதரவு பெருகி வரும் வாதத்தை கடந்த காலங்களில் ஆதரித்தவர் ஷாபி அப்டால்.

இப்போதோ மனம் மாறியவராக தனது வாரிசான் கட்சியை மேற்கு மலேசியாவில் விரிவாக்கம் செய்ய முனைந்துள்ளார்.

அதற்கு கைகொடுக்க சையிட் சாதிக் முன்வந்துள்ளார்.

ஆனால் மூடா கட்சி சபா மாநிலத்திலும் கால்பதிக்க, விரிவுபடுத்தப்பட ஷாபி அப்டால் ஆதரவு தருவாரா என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை!

ஷாபி அப்டாலின் கூட்டணி இணைப்பால் மூடா கட்சி சபா மாநிலத்தில் கால் பதிக்குமா என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது.

மற்ற கூட்டணிகளோடு இணையாத முரண்பாடு

இந்நிலையில் மேற்கு மலேசியாவில் தனக்கென பல இன மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள  சையிட் சாதிக், இன்னும் முறையாக பதிவு செய்யப்படாத மூடா கட்சியை ஷாபி அப்டால் கட்சியுடன் இணைத்துக் கூட்டணி அமைத்திருப்பது எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை என்றே தோன்றுகிறது.

தனக்கென இருந்த பிம்பத்தின் மீது – இளையோரிடையே தனித்த செல்வாக்கு  கொண்ட முத்திரையின் மீது – குறைகளையும்,  கறைகளையும்  இந்த இணைப்பின் மூலம் சையிட் சாதிக் தம் மீது சுமத்திக் கொண்டார், என்றே கருதத் தோன்றுகிறது.

இதன் மூலம் பக்கத்தான்  ஹாராப்பான், தேசிய முன்னணி, பெரிக்காத்தான் நேஷனல் ஆகிய மூன்று கூட்டணிகளையுமே சையிட் சாதிக் புறக்கணித்துள்ளார்.

இன்றைய அரசியல் சூழ்நிலையில் இது சரியான வியூகமாகத் தெரியவில்லை.

அவசரப்பட்டு எடுத்த  தவறான வியூகமாகவே படுகிறது.

எதிர்வரும் 15ஆவது பொதுத் தேர்தலில்  சையிட் சாதிக்– ஷாபி அப்டால் கூட்டணி மேற்கு மலேசியாவின் சில தொகுதிகளில்  கணிசமான வாக்குகளைப் பெறலாம்.

ஆனால், மேற்கூறப்பட்ட மூன்று பெரிய கூட்டணிகளில் –  ஏதாவது ஒன்றுடன் தேர்தல் உடன்பாடு காணாமல் – மேற்கு மலேசியாவில் மூடா கட்சி ஏதாவது ஒரு நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற முடியுமா என்பது கேள்விக் குறிதான்.

சைட் சாதிக் அவரின் மூவார் தொகுதியிலேயே 15-வது பொதுத் தேர்தலில் வெற்றி வாகை சூட முடியுமா என்பதும் கேள்விக் குறிதான்.

மூடா கட்சியால் வாரிசான் கட்சிக்குத்தான் சாதகம் ஏற்படுமே தவிர, வாரிசான் கட்சியாலோ, ஷாபி அப்டால் இணைப்பாலோ, இப்போதிருப்பதைவிட கூடுதலான செல்வாக்கை மூடா கட்சி பெற்று விட முடியாது.

சில தொகுதிகளில் வாக்குகளைப் பிளக்கலாம். அதனால், தேசிய முன்னணி, பெரிக்காத்தான் நேஷனல், பக்காத்தான் ஹாரப்பான் என ஏதாவது ஒரு கூட்டணிதான் இலாபமடைந்து அந்தத் தொகுதியில் வெற்றிக் கனியைப் பறிக்க முடியுமே தவிர – மூடாவோ, வாரிசான் சபா கட்சியோ – நிச்சயம் பலனடைய முடியாது.

சில சமயங்களில் சில அரசியல் வியூகங்களும் முடிவுகளும்  யாரும் எதிர்பாராத வெற்றியை ஏற்படுத்திக் கொடுக்கும்.

சையிட் சாதிக்கின் இந்த முடிவும் அவருக்கு அத்தகைய வெற்றியைத் தருமா?

அல்லது பின்னடைவைத் தருமா? என்பதை 15ஆவது தேர்தல் முடிவுகளே எடுத்துக்காட்டும்.

-இரா.முத்தரசன்