Home Featured நாடு “ஐரோப்பா-அமெரிக்கா போகாதீர்கள்! பக்கத்திலிருக்கும் சிங்கப்பூரைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள்” மலேசிய அரசியல்வாதிகளுக்கு ஜோகூர் சுல்தான் அறிவுரை

“ஐரோப்பா-அமெரிக்கா போகாதீர்கள்! பக்கத்திலிருக்கும் சிங்கப்பூரைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள்” மலேசிய அரசியல்வாதிகளுக்கு ஜோகூர் சுல்தான் அறிவுரை

801
0
SHARE
Ad

ஜோகூர்பாரு – நேற்றைய ஸ்டார் பத்திரிக்கையில் வெளியாகி இருந்த விரிவான பேட்டியில் ஜோகூர் சுல்தான் அண்டை நாடான சிங்கப்பூரைப் பற்றியும் சில கருத்துகளைக் கூறியுள்ளார்.

n_08sultanJohor1“ஜோகூரின் வியூகம் மிக்க அண்டை நாடாக சிங்கப்பூர் இருப்பதால் ஜோகூரைப் பாதிக்கும் விவகாரங்கள் குறித்து பிரதமர் மிகுந்த அக்கறையும் கவனமும் செலுத்துகின்றார். தற்போதுள்ள மேம்பாடுகளோடு, கோலாலம்பூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான விரைவு இரயில் திட்டம் நிறைவடைந்தால் ஜோகூரும் மலேசியாவும் ஏராளமான அளவில் பயனடையும் என நானும் பிரதமரும் வெகுவாக நம்புகின்றோம்” என்று ஜோகூர் சுல்தான் கூறியுள்ளார்.

“சிங்கப்பூருடன் நாம் சர்ச்சையில் ஈடுபட வேண்டும் எனக் கூறும் எந்த ஒரு மலேசியத் தலைவரும் முன்வைக்கும் தர்க்க வாதங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதை நான் கோணலான சிந்தனை என்றுதான் கூறுவேன். சிங்கப்பூரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கின்றன. அவர்கள் சிறப்பா செயல்பட்டிருக்கின்றார்கள் என்பதை நாம் நேர்மையாக ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அதிக செலவு பிடிக்கும் பயணங்களை மேற்கொண்டு அவர்கள் எப்படி வளர்ச்சியடைந்துள்ளார்கள் என நாம் ஆராய வேண்டியதில்லை. மேம்பாலத்தைக் கடந்து சிங்கப்பூர் சென்று பார்த்தாலே அவர்கள் பல விஷயங்களை சரியாகவும், திறம்படவும் செய்திருக்கின்றார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்” என்றால் சுல்தான்.

#TamilSchoolmychoice

ஆங்கிலம் போதிக்கும் ஒரே மாதிரியான பள்ளி முறை தேவை

ஸ்டார் பத்திரிக்கைக்கு வழங்கிய பேட்டியில் ஆங்கிலத்தின் தரம் நாட்டில் குறைந்து கொண்டு வருவதையும் சுட்டிக் காட்டியுள்ள ஜோகூர் சுல்தான், தற்போதுள்ளது போல், தேசியப் பள்ளிகள், சீன, தமிழ்ப் பள்ளிகள் என மூன்று பிரிவாக இல்லாமல் ஒரே மாதிரி கல்வி முறையைக் கொண்டு, ஆங்கிலத்தை போதனா மொழியாகக் கொண்ட நடைமுறை நாட்டுக்குள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என அறைகூவல் விடுத்திருக்கின்றார்.