பெய்ஜிங் – தென் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் சென்சேன் நகரில் இருக்கும் தொழில்நுட்ப பூங்காவில் கடந்த 20-ம் தேதி பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த பூங்காவில் இருந்த 33 கட்டிடங்கள் மண்ணில் புதைந்தன. ஏறக்குறைய 70-க்கும் மேற்பட்ட பணியாளர்களும், குடியிருப்பு வாசிகளும் மண்ணில் புதையுண்டனர். அங்கு தற்போது தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
ஆரம்பத்தில் இயற்கை பேரிடராக கருதப்பட்ட இந்த சம்பவம், பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அந்தத் தொழிற்பூங்காவில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் கட்டிடப் பணிகளுக்காகத் தோண்டியெடுக்கப்பட்ட மண் குவியல் 1 லட்சம் சதுர அடி பரப்பில், 100 மீட்டர் உயரத்துக்கு மலை போல குவித்து வைக்கப்பட்டிருந்ததே காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. சரியான நேரத்திற்குள் அதனை அகற்றாமல், அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததன் விளைவு தான் இந்த நிலச்சரிவு என்றும் தெரிய வந்தது.
மாவட்ட நிர்வாகம், இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிப்படுவர் என்று கூறியிருந்தது. இந்நிலையில், அந்த மாவட்டத்தின் கழிவு குவியல்களை அகற்றும் துறையின் முக்கிய அதிகாரி சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். நிலச்சரிவு சம்பவத்தினைத் தொடர்ந்து, நடக்க இருக்கும் விசாரணைகளுக்கும், தண்டனைகளுக்கும் பயந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக, உள்நாட்டுப் பத்திரிக்கைகள் தெரிவித்தாலும், காவல்துறையினர் அதனை மறுத்துள்ளனர்.
சீனாவின் தொழில்துறை பாதுகாப்பு தரத்தை கேள்விக்குறியாக்கி உள்ள இந்த நிலச்சரிவு சம்பவத்தின் விசாரணை, மீது சீனா அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.