சென்னை – தமிழகத்தின் மூத்த தமிழறிஞரும், தமிழாய்வுலகில் தனக்கெனத் தனித்த இடத்தைப் பெற்றவருமான முனைவர் இராம. பெரியகருப்பன் (தமிழண்ணல்) ஐயா அவர்கள் (படம்) இயற்கை எய்தினார் என்ற செய்தியை முனைவர் மு.இளங்கோவன் செல்லியல் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
பேராசிரியர் தமிழண்ணல் ஐயா அவர்கள் உடல் நலம் குன்றி, தம் 88 ஆம் அகவையில் இயற்கை எய்தியுள்ளார் என்றும அன்னாரின் நல்லுடலுக்கான இறுதிச் சடங்குகளும் நல்லடக்கமும் இன்று வியாழக்கிழமை மதுரையில் நடைபெற்றது என்பதையும் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் தமிழண்ணல் அவர்கள் தமிழ்ப்பற்றுடன் விளங்கிய தமிழ்ப் பேராசிரியர் ஆவார். தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்தி உண்ணாநோன்பு இருந்த தமிழறிஞர் குழுவுக்குத் தலைமையேற்றவர்.
தொல்காப்பியத்திற்கு முரணாக ஒரு தொல்காப்பியப் பதிப்பு வந்தபொழுது துணிச்சலுடன் நின்றெதிர்த்த பெரும்புலவர்.
தமிழண்ணலின் பெருமைகளையும், சிறப்புகளையும் பற்றித் தெரிவித்துள்ள இளங்கோவன் “அன்னாரின் இத்தகையப் பின்னணிக் காரணங்களால் இவரது தலைமையில்தான் யான் திருமணம் செய்துகொண்டேன். என் சிற்றூருக்கு வருகை தந்து என் நூல்களை 1995ஆம் ஆண்டில் வெளியிட்டவர். சில ஆண்டுகளுக்கு முன் புதுச்சேரிக்கு வந்தபொழுது நம் இல்லம் வந்து எங்களின் எளிய விருந்தினை ஏற்றவர். மதுரை செல்லும்பொழுது யானும் தமிழண்ணல் ஐயா அவர்களைக் காண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
“தனது அன்பால் எங்களைப் பிணைத்திருந்த பேராசிரியர் தமிழண்ணல் ஐயா அவர்களின் மறைவுச் செய்தி எனக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்தது. எங்களின் கண்ணீர் வணக்கத்தை ஐயாவுக்குக் காணிக்கையாக்குகின்றோம்” எனவும் இளங்கோவன் தனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.