கோலாலம்பூர் – எங்கோ வெடிகுண்டு வெடிக்கின்றது என மலேசிய மக்கள் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்த வேளையில், பக்கத்திலிருக்கும் ஜாகர்த்தாவிற்கே வந்து விட்டது தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல்.
இதனைத் தொடர்ந்து, மலேசியாவிலும் உச்சகட்ட முன்னெச்சரிக்கைப் பாதுகாப்பு ஏற்பாடுகளை மலசியக் காவல் துறையினர் மேற்கொண்டுள்ளனர். கோலாலம்பூரில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க முன்கூட்டியே சில நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் அறிவித்துள்ளார்.
மக்கள் அதிக அளவில் கூடும் பேரங்காடிகள், சுற்றுப் பயணிகள் குவியும் சுற்றுலா மையங்கள் ஆகிய இடங்களில் கூடுதல் கவனங்கள் செலுத்தப்படுகின்றது.
அதேவேளையில், தீவிரவாதிகள் நாட்டினுள் நுழைந்து விடாமல் இருக்க, எல்லை குடிநுழைவு பரிசோதனை முனையங்களில் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்படுகின்றன.
மலேசியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல் துறை எல்லா கோணங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் டான்ஸ்ரீ காலிட் அறிவித்துள்ளார்.