இதுபோன்ற வழக்குகளில் கருணாநிதி இதுவரை நேரில் ஆஜரானதே இல்லை. அதனால் இந்த வழக்கிலும் ஆஜராகமாட்டார். அவரது சார்பில் தடை வாங்க வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், கடந்த வாரம் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், “ஆட்சி அதிகாரம் கையில் உள்ளது என்பதற்காக அதிமுக அரசு எதிர்க்கட்சிகள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து ஒடுக்க நினைக்கிறது. ஜெயலலிதா, என் மீது தொடுத்திருக்கும் எத்தனையோ அவதூறு வழக்குகளில் இதுவும் ஒன்று என்பதால், சட்ட நியாயத்தை நிலைநாட்டிட, இந்த வழக்கையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். ஆனாலும் திமுக, வழக்கறிஞர்கள் என்னை சந்தித்து, இந்த வழக்கில் இடைக்காலத் தடையாணை பெறலாம் என்று யோசனை தெரிவித்த போது, அது தேவையில்லை என்றும் நானே நேரில் நீதிமன்றத்தில் ஆஜராவதாகவும் தெரிவித்திருக்கிறேன். ஜனவரி 18-ம் தேதி காலை 10.30 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளேன்” என்று அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.
நீண்ட வருடங்கள் கழித்து வழக்கு ஒன்றிற்காக கருணாநிதி நீதிமன்றத்தில் ஆஜராக இருப்பதால், நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, முதுமை பருவத்தில் தான் அலைக்கழிக்கப்படுவது போல் மக்கள் முன்னிலையில் காட்டிக் கொள்ளவே கருணாநிதி தற்போது நேரில் ஆஜராக முடிவெடுத்து இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.