கோலாலம்பூர் – மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையான நம்பிக்கையில்லா வாக்குகளைப் பெறுதல் அல்லது அரசப் பேராளர்கள் மன்றத்தின் அதிகாரம் (power vested in the Regency Council) போன்றவற்றால் மட்டுமே கெடா மந்திரி பெசார் பதவியில் இருந்து டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீரை நீக்க முடியும் என அரசியலமைப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் எமெரிடஸ் டத்தோ டாக்டர் ஷாத் சலீம் ஃபருகி கூறுகையில், மாநில சட்டமன்றம் கூடி, அதில் முக்ரிஸ் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளின் அடிப்படையிலேயே முடிவெடுக்க இயலும் என்று தெரிவித்துள்ளார்.
“அரசாங்க சட்டமன்ற உறுப்பினர்களோ அல்லது மற்ற சட்டமன்ற உறுப்பினர்களோ, அவர்களின் பெரும்பான்மையான ஆதரவைப் பெறுவதை வைத்தே அவரது பதவி குறித்து முடிவெடுக்க இயலும்” என்று டாக்டர் ஷாத் பெர்னாமாவிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மற்றொரு அரசியலமைப்பு வல்லுநரான இணைப் பேராசிரியர் டாக்டர் ஷம்ராஹ்யு அப்துல் அசிஸ் கூறுகையில், அகமட் பாஷாவின் அறிவிப்பு ஒரு கருத்து மட்டுமே, சட்டப்பூர்வமான கட்டுப்பாடுகள் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்குகளின் அடிப்படையில் தான் முக்ரிசை வெளியேற்ற முடியும் என்பதையும் ஷம்ராஹ்யு ஒப்புக் கொண்டுள்ளார்.