Home Featured நாடு “ஜனநாயகப்படி – சட்டப்படி – தேசியத் தலைவரானவர் சுப்ரா” – வி.எஸ்.மோகன் விளக்கம்!

“ஜனநாயகப்படி – சட்டப்படி – தேசியத் தலைவரானவர் சுப்ரா” – வி.எஸ்.மோகன் விளக்கம்!

647
0
SHARE
Ad

V.S.Mohanகோலாலம்பூர் – “ம.இ.காவின் புதிய தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் சூழ்ச்சிகள் செய்து தேசியத் தலைவராக இருக்கிறார் என டத்தோஸ்ரீ பழனிவேல் தரப்பினர் ஒன்றும் அறியாதவர்களைப் போல் பொய் பரப்புரை பரப்பி வருகின்றனர். நீதிமன்ற உத்தரவுகளையும் ஆர்.ஓ.எஸ் என்ற சங்கப் பதிவகம் விதித்த அறிவுரைகளையும் முறையாகப் பின்பற்றி ம.இ.காவின் தேர்தலையும் ஜனநாயக முறைப்படி நடத்தி, அதன் மூலமே,  ம.இ.காவின் தேசியத் தலைவராக டாக்டர் ச.சுப்பிரமணியம் மஇகா தேசியத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்” என மஇகா தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ வி.எஸ்.மோகன் தெரிவித்துள்ளார்.

“கூட்டத்திற்கு வராத பழனிவேல்”

G-Palanivel1“சூழ்ச்சிகள் செய்து யாரும் தேசியத் தலைவராகவில்லை. டத்தோஸ்ரீ பழனிவேல் தலைவராக இருந்த காலக் கட்டத்தில் ஆர்.ஓ.எஸ் கடிதம் வழங்கிய பின் பலமுறை மத்திய செயலவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தோம். கூட்டத்திற்கு தலைவர் வருவார் வருவார் என எதிர்பார்த்து ஏமாந்த நிலையிலேயே பல கூட்டங்களை நடத்தினோம். தலைவர் வராத சூழ்நிலையில் அப்போது துணைத்தலைவராக இருந்த டாக்டர் ச.சுப்பிரமணியம் கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். இதில் யாரும் பழனிவேலுக்கு எதிராக சூழ்ச்சி செய்யவில்லை. அவராகவே சுற்றியிருப்பவர்களின் பேச்சையும், சில சுயநலவாதிகளின் பேச்சையும் கேட்டுக் கொண்டு தன்னுடைய உறுப்பினர் பதவியையே இழந்தார்” என நேற்று விடுத்த பத்திரிக்கை அறிக்கை ஒன்றில் மோகன் மேலும் விளக்கியுள்ளார்.

#TamilSchoolmychoice

“நாங்கள் யாரும் அவர் உறுப்பினர் தகுதியை இழந்து விட்டார் எனக் கூறவில்லை. மாறாக கட்சி சம்மந்தமான விவகாரங்களை மத்திய செயலவையின் அனுமதியின்றி நீதிமன்றத்திக்குக் கொண்டு செல்லக்கூடாது என்ற அடிப்படைச் சட்டத்தையும் மீறி நீதிமன்றத்திற்குச் சென்ற காரணத்தால் அவருடைய தலைவர் பதவி முதற்கொண்டு உறுப்பினர் தகுதியையும் தானாகவே இழந்த ஒரே தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேல்தான். இதனைத்தான் நீதிபதியும் தெளிவாகக் கூறியுள்ளார்” என்றும் மோகன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Dr Subra - MIC PRESIDENT“அதற்கு அவருடைய இயலாமையும் அவரைச் சுற்றியிருந்தவர்களின் சுயநலமுமே காரணமாகும். அவர்களுடைய இயலாமையை மறைக்க அன்றிலிருந்து இன்றுவரை பிறர் மீது பழி சுமத்தும் வேலையிலேயே இருக்கின்றனர். நிலைமை இப்படியிருக்க டாக்டர் சுப்பிரமணியம் சூழ்ச்சி செய்தார் எனக் கூறுவது எந்த விதத்தில் நியாயமாகும் என்று தெரியவில்லை. மக்களைக் குழப்ப தொடர்ந்து நாடகம் நடத்தி வருகின்றனர். உங்களால் முடிந்தவரையில் நடத்துங்கள். ஆனால், அவர்களுடைய நாடகங்கள் எந்த வகையிலும் சமுதாயத்திற்கோ அல்லது அவர்களுக்கோ பலனளிக்கப் போவதில்லை” என்றும் மோகன் கூறியுள்ளார்.

டத்தோ இரமணன் யார்?

வெள்ளிக்கிழமை வழக்கு தொடுக்கப்பட்டபோது அங்கு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய முன்னாள் மஇகா தலைமைப் பொருளாளர் டத்தோ ஆர்.இரமணன், டாக்டர் சுப்ரா குறித்து தெரிவித்த சில கருத்துகள் தொடர்பிலும் மோகன் தனது அறிக்கையில் பதிலடி கொடுத்துள்ளார்.

datuk-ramanan-mic“டத்தோ ரமணன் எப்படிப் பட்டவர் என அனைவருக்கும் தெரியும். அவர் செய்தது  என்னவென்பதும் நாட்டிற்கே தெரியும். அவர் மற்றவர்களை ஊழல் பேர்வழி என்று கூறி வருகிறார். அவருடைய ஊழல் விவகாரத்தைப் பேசினால் பேசிக் கொண்டே போகலாம். எனவே தொடர்ந்து குட்டையைக் குழப்பாமல் முடிந்தால் மக்களுக்கு ஏதாவது நன்மையைச் செய்யுங்கள்” என்றும் மோகன் இரமணனை சாடியுள்ளார்.

“ம.இ.காவின் தேர்தல் சுமூகமாக முடிந்துவிட்ட நிலையில் நாங்கள் அடுத்து பொதுத்தேர்தலுக்கு முன்னோக்கிச் செல்வதற்கான ஆயத்த முயற்சியில் இருக்கின்றோம். டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் அவர்களின் சிறந்த தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கைக் கொண்டு பழனிவேல் தரப்பினரோடு இருந்த பல உறுப்பினர்கள் தற்பொழுது எங்களுக்கு ஆதரவாகவும் இருக்கின்றனர். எனவே, தொடர்ந்து, புலி வருகிறது புலி வருகிறது என ஏமாற்று கதைகளைக் கூறி இனியும் நாடகம் நடத்த வேண்டாம். நீங்கள் எந்த நீதிமன்றத்திற்குச் சென்றாலும் அதனை எதிர்கொள்வதற்கான நியாயமும் தருமமும் எங்களிடத்தில் இருக்கிறது. எதையும் சமாளிக்கக்கூடிய வலிமையும் ஆற்றலும் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியத்தின் தலைமைத்துவத்தில் இருக்கின்றது” என்றும் மோகன் வலியுறுத்தி உள்ளார்.

MIC-logo“ம.இ.கா என்பது ஒரே கட்சிதான். அதற்கு ஒரே தலைவர் தற்பொழுது டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் மட்டும்தான். அவருடைய தலைமைத்துவத்தில் தற்பொழுது நாடு தழுவிய நிலையில் ஒற்றுமை பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வோர் இடத்திற்கும் சுமார் 2000க்கும் மேலான மக்கள் கலந்து கொண்டு ஆதரவு வழங்கி வருகின்றனர். பழனிவேல் தரப்பினர் நேரில் வந்து பார்த்தாவது உண்மையைப் புரிந்து கொள்ளட்டும். சமுதாய பலம் கொண்டு சமுதாயம் எதிர்பார்க்கும் தலைவராக டாக்டர் ச.சுப்பிரமணியம் அவர்கள் திகழ்கிறார். அதற்கு நீங்கள் எந்த வகையில் இடையூறு ஏற்படுத்தினாலும் எந்தவொரு மாற்றமும் ஏற்பட போவதில்லை. தேசியத் தலைவரின் உழைப்பிற்கும் சமுதாயத்தின் மீதும் ம.இ.காவின் மீதும் அவர் கொண்டிருக்கும் பற்றுக்கும் நாங்கள் எப்பொழுதும் துணை நிற்போம்” என்றும் மஇகா தகவல் பிரிவுத் தலைவரான மோகன் கூறியுள்ளார்.

“பழனிவேல் தரப்பினருக்கு, வாய்ப்புகள் நிறையக் கொடுக்கப்பட்டு விட்டது. கிடைத்த வாய்ப்புகளைக் கை நழுவ விட்டு இப்பொழுது கூப்பாடு போடுவதில் எந்தவொரு பலனும் இல்லை. அதற்கான நேரமும் இது இல்லை என்பதை புரிந்து கொண்டு புத்தியுள்ளவர்களாக நடந்து கொள்வதே புத்திசாலித்தனமாகும்” என்றும் மோகன் கேட்டுக் கொண்டுள்ளார்.