கோலாலம்பூர் – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு நன்கொடையாக 2.6 பில்லியன் அளித்தது, மறைந்த சவுதி அரசரின் மகன் தான் என்று மலேசிய தலைமை வழக்கறிஞர் மொகமட் அபாண்டி அலி தெரிவித்துள்ளார்.
எனினும், நன்கொடையாளரின் பெயர் விவரங்களைத் தெரிவிக்க அபாண்டி அலி மறுத்துள்ளார்.
“எங்களுக்கு அவரின் பெயர் தெரியும். அவர் மறைந்த சவுதி மன்னர் கிடையாது. ஆனால் அவரின் மகன். அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார்” என்று சின் சியூ டெய்லி பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் அபாண்டி அலி தெரிவித்துள்ளார்.
மேலும், நன்கொடை அளித்தவரிடம் தாம் அறிக்கை பெற்று அதைப் பதிவு செய்து வைத்திருப்பதாகவும் அபாண்டி அலி குறிப்பிட்டுள்ளார்.
“நன்கொடை அளித்ததற்கு ஏன் மக்கள் காரணம் கேட்கிறார்கள்? அதை நன்கொடை அளித்தவரிடம் தான் கேட்க வேண்டும். அவரிடம் பில்லியன் கணக்கில் உள்ளது. யாருக்கெல்லாம் அவர் கொடுக்க வேண்டுமென்று நினைக்கிறாரோ கொடுக்கிறார். அதனால் என்ன?”
“அது அவரின் பணம். அது அவரது தனிப்பட்ட விவகாரம். நன்கொடை பெறுவது சட்டவிரோதம் என்று நம் நாட்டில் எந்த ஒரு சட்டமும் இல்லை” என்று அபாண்டி அலி தெரிவித்துள்ளார்.