Home Featured தொழில் நுட்பம் “செயலிகளில் தமிழ் இடைமுகங்கள்” – முத்து நெடுமாறன்

“செயலிகளில் தமிழ் இடைமுகங்கள்” – முத்து நெடுமாறன்

976
0
SHARE
Ad

கோலாலம்பூர் – (‘செல்லினம்’, முரசு அஞ்சல் மென்பொருள் ஆகியவற்றின் உருவாக்குநரும், செல்லியல் தகவல் ஊடகத்தின் தொழில்நுட்ப வடிவமைப்பாளருமான முத்து நெடுமாறன் எழுதி அண்மையில் ‘செல்லினம்’ குறுஞ்செயலியில் வெளியிடப்பட்ட இந்த கட்டுரையை ‘செல்லியல்’ வாசகர்களுக்காக மீண்டும் பதிவேற்றம் செய்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்)

muthu-nedumaranசெல்பேசிகள் பொதுப்பயனீட்டிற்கு வந்து இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. இந்த இருபது ஆண்டுகளில் செல்பேசித் தொழில்நுட்பம் கண்டுள்ள வளர்ச்சியை வேறு எந்தப் பொதுப் பயன்பாட்டுத் தொழில்நுட்பமும் கண்டிருக்குமா என்பது சந்தேகமே.

கணினிகள் கூட, வடிவத்திலும் வேகத்திலும் மாற்றங்களைக் கண்டுள்ளனவே தவிர அதன் அடிப்படைத் தொழில்நுட்பத்தில் நிலைகுலைக்கும் மாற்றங்களைக் காணவில்லை. கணினிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையைவிட செல்பேசிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகமாக இருப்பதே இந்தத் துரித வளர்ச்சிக்கு முதன்மையான காரணம்.

#TamilSchoolmychoice

இதே காரணத்திற்காகத்தான் மொழியியல் சார்ந்த தொழில்நுட்பங்கள் கூட, கணினிகளில் கண்ட மேம்பாட்டைவிட இன்று கையடக்கக் கருவிகளில் வேகமாகக் கண்டு வருகின்றன.

Muthu Nedumaran article-Nokia-English-UIசெல்பேசிகளைப் பயன்படுத்த ஒருவருக்கு ஆங்கில அறிவு கண்டிப்பாக இருக்கவேண்டும் என்ற சூழ்நிலை இன்று இல்லை.

இவற்றின் பயன்பாடு எல்லோரிடமும் போய் சேரவேண்டும் என்பதற்காகவே பயனர் இடைமுகங்கள் (user interface) வழக்கமாக வழங்கப்படும் ஆங்கிலம், சீனம், சப்பான், கொரியா எனும் மொழிகளோடு நின்றுவிடாமல், மற்ற மொழிகளிலும் வழங்கப்பட்டு வருகின்றன.  செல்பேசிகளில், குறிப்பாகத் திறன்பேசிகளில் (smart phones), இடைமுகங்கள் முழுமையாக வழங்கப்படும் மொழிகளில் தமிழும் ஒன்றாக அண்மைக் காலங்களில் சேர்ந்துள்ளது!

முதன்மை இடைமுக மொழி

ஒரு கணினியையோ அல்லது கருவியையோ எந்த மொழியில் இயக்குகிறோமோ அதுவே அதன் முதன்மை இடைமுக மொழி (Main interface language) என்று சொல்லலாம். ஒரு கருவியை பயனர்கள் எளிமையாக இயக்குவதற்கு வழங்கப்படும் கட்டமைப்பையே இடைமுகம் (interface) என்கின்றோம். நமக்கும் கருவிக்கும் இடையில் இருக்கும் முகம் – இடைமுகம்.

தொடக்க காலத்தில் இடைமுக மொழி என்றாலே ஆங்கிலம் தான். அதன் பிறகு, ஆங்கிலம் கற்காத சீனா, கொரியா, ஜப்பான் போன்ற நாட்டவரும் பயன்படுத்தும் வகையில் முதன்மை இடைமுகங்கள் அவர்களின் மொழியிலும் வழங்கப்பட்டன.

இந்தியாவில் கணினிகளை வாங்கிப் பயன்படுத்துபவர்களுக்கு நல்ல ஆங்கில அறிவு இருந்ததாலும், இவர்கள் ‘எங்கள் மொழியிலும் இடைமுகம் வேண்டும்’ என்று கேட்காததாலும், இந்திய மொழிகளில் இடைமுகங்கள் இருக்கவேண்டும் என்ற கட்டாய நிலை தோன்றவில்லை. எனவே இந்தத் துறை மேம்பாடடையவில்லை.

கையடக்கக் கருவிகளின் பயன்பாடு வந்தபிறகு, ஆங்கிலம் கற்காதவரும் அவற்றைப் பயன்படுத்தினால்தான் விற்பனை விரிவாக்கம் காணும் எனும் காரணத்திற்காக, இந்திய மொழிகளில் இடைமுகங்களைச் சேர்த்து வருகின்றனர் மின்னுட்ப நிறுவனங்கள். அதிலும் தொடக்கத்தில் இந்தி மட்டுமே போதும் என்ற நிலை மாறி இப்போது தமிழ் உட்பட மற்ற மொழிகளிலும் முதன்மை இடைமுகங்கள் வழங்கப் பட்டு வருகின்றன.

இதில் முன்னோடியாக விளங்குவது கூகுளின் ஆண்டிராய்டு. கடந்த ஆண்டு வெளிவந்த மார்சுமெலோ எனப்படும் ஆண்டிராய்டு-6இல் இயங்கும் மோட்டோரோலா நெக்சாசில் அமைப்புக்கானப் பக்கம் ஒன்று தமிழில் வழங்கப்பட்டுள்ளதைக் கீழே காணலாம்.  இந்தக் கருவியில் அனைத்து செயல்பாடுகளையும் தமிழிலேயே செய்யலாம்!

Muthu Nedumaran articles-Nexus-6-Tamil-UI-Screens

தனிப் பயனாக்கம் செய்யப்பட்ட ஆண்டிராய்டு கருவிகள்

கூகுள் வழங்கும் ஆண்டிராய்டு பதிப்பை அதிக மாற்றம் இன்றி அப்படியே வழங்கும் கருவிகளில் தமிழ் இடைமுகத்தை நெக்சாசில் பெறுவது போலவே பெற்றுக் கொள்ளலாம். ஆனால் தனிப்பட்ட வணிகச் சின்னப் பெயர்களைக் கொண்டிருக்கும் எச்.டி.சி, லெனோவோ போன்ற நிறுவனங்கள், அவரவர் கருவிகளின் செயல்பாட்டிற்கு ஏற்றவாறு கூகுளின் இடைமுகத்தையே தனிப் பயனாக்கம் (customise) செய்து தருகின்றனர்.

இவர்களின் கருவிகளில் பெரும்பாலும் இந்தி மட்டுமே முதன்மை இடைமுக மொழியாகக் கிடைக்கும். இவர்களின் கருவிகளில் உள்ள எல்லா செயல்பாடுகளும் தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்படாததாலே தமிழைத் தேர்வு செய்யும் வாய்ப்பையும் அவர்கள் வழங்குவதில்லை.

எனினும், கூகுள் பிளேயில் கிடைக்கும் சில செயலிகள், எளிதாகவே முதன்மை மொழியாகத் தமிழை அமைப்பதற்கு உதவுகின்றன. தமிழை ஒரு தேர்வாக வழங்காதக் கருவிகளில் கூட இந்தச் செயலிகளின் வழித் தமிழைப் பெற்றுக்கொள்ளலாம். பெரும்பாலான இந்தச் செயலிகள் இயங்க உங்கள் கருவி ‘ரூட்’ செய்யப்பட்டிருக்க வேண்டும். பலருக்கு ‘ரூட்’ செய்வது ஒரு தடையாக அமையலாம். ‘Locale More Pro’ எனும் செயலியின் திரையில், தமிழும் அதன் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

Muthu Nedumaran article-LMPRO-ScreenShotஏன் இத்தனைத் தமிழ்?

தமிழ் மொழி இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என நான்கு நாடுகளின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. ஏன் இத்தனை? இந்த நான்கு நாடுகளில் பேசப்படும் தமிழ் மொழியில் அவ்வளவு வேறுபாடுகள் உள்ளனவா? இதுபோன்ற கேள்விகள் எழலாம்.

தொடக்கத்தில் இந்தியா, இலங்கை என இரு நாடுகளின் கீழ் மட்டுமே தமிழ் இருந்தது. மலேசியாவிலோ, சிங்கப்பூரிலோ தமிழ் இடைமுகத்தைத் தேர்ந்தெடுத்தால், நாணயத்தின் பெயர் ரூபாயாகவும், எண்கள் லட்சம் கோடி எனவும் தோன்றும். ரூபாய் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் புழங்கப்படுவதில்லை. அதுபோல லட்சம் கோடி என்பதும் இந்த நாடுகளின் வழக்கு நிலை எண்ணிக்கை இல்லை. நூறாயிரம், மில்லியன் முதலிய எண்ணிக்கையே இங்கு உள்ள பயன்பாட்டு வழக்கம். 1,00,000 என்று எழுதி, ஒரு லட்சம் என்று சொன்னால் இங்குள்ளவர்களுக்குப் புரியாது. 100,000 என்று எழுதி நூறாயிரம் என்று சொன்னால்தான் புரியும்.

இதுபோன்றத் தேவைகள் இருக்கின்றன என்பதற்காகத்தான் தமிழ் (மலேசியா), தமிழ் (சிங்கப்பூர்) எனும் இரண்டு வட்டார வழக்குகளை யூனிகோடு அமைப்புக்கு சில ஆண்டுகளுக்கு முன் நான் (முத்து நெடுமாறன்) பரிந்துரைத்தேன்.

அவை ஏற்றுக்கொள்ளப்பட்டு இப்போது புழக்கத்திற்கும் வந்து விட்டன.

[குறிப்பு: மலேசிய நாட்டின் பெயரை ‘மலேசியா’ என்றுதான் தமிழில் எழுதுவோம். ‘மலேஷியா’ என்று இங்கு யாரும் எழுதமாட்டார்கள். இதனைத் திருத்துவதற்கான பரிந்துரையும் அனுப்பப்பட்டுள்ளது].

செயலிகளில் தமிழ் இடைமுகங்கள்

முதன்மை இடைமுகம் தமிழில் அமைக்கப்பட்டுவிட்டாலே போதும். தமிழில் இடைமுகங்களை வழங்கும் எல்லா செயலிகளும் தமிழில் செயல்படத் தொடங்கிவிடும். தமிழாக்கம் செய்யப்படாத வரிகள் மட்டும் ஆங்கிலத்தில் தோன்றும்.

கூகுளின் செயலிகள் பெரும்பாலும் தமிழிலும் வழங்கப்படுகின்றன. மைக்குரோசாப்டும் தமிழில் வழங்கத் தொடங்கியுள்ளனர். இவர்களைத் தவிர மற்ற பெரிய நிறுவனங்களும் தமிழிலும் இடைமுகங்களைக் கொடுக்கின்றனர். அவ்வாறு தோன்றும் செயலிகள் இரண்டை இங்கே காணலாம்: (1) ஏர் ஏசியா (2) வாட்சாப்

Muthu Nedumaran-AirAsiaWhatsAppTamilஐ-போனில் தமிழ் இடைமுகம் உள்ளதா?

முதன்மை இடைமுக மொழியாகத் தமிழ் வழங்கப்படவில்லை என்றாலும், மாதம், கிழமை, நேரம் போன்றவற்றைத் தமிழில் காண்பதற்கும், செயலிகளின் இடைமுகங்களைத் தமிழில் அமைப்பதற்கும் சில ஆண்டுகளுக்கு முன்பே ஐ.ஓ.எசில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஆண்டிராய்டு கருவிகளில் தமிழ் எழுத்துருகள் சேர்க்கப்படும் முன்பே ஐபோனில் ‘இணைமதி’ எனும் எழுத்துரு சேர்க்கப்பட்டது. இருப்பினும் முதன்மை இடைமுகம் இன்னும் தமிழில் வழங்கப்படாதது ஒரு பெரிய குறையே! வரும் ஆண்டுகளில் ஐபோனையும் ஐபேட்டையும் முழுமையாகத் தமிழில் இயக்கக்கூடிய வாய்ப்பு நமக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்ப்போம்.

தமிழ் எழுத்துரு இயல்பாக இருப்பதாலும், வட்டார மொழியாகத் தமிழ் சேர்க்கப்பட்டுள்ளதாலும், சில நிறுவனங்கள் தமிழிலும் தங்கள் ஐபோன் செயலிகளின் இடைமுகங்களை வழங்கி வருகின்றனர். அதில் முதல் நிலையில் இருப்பது கூகுள். மைக்குரோசாப்ட்டும் கூட அவர்களின் அவுட்லூக் (Outlook) செயலியை தமிழிலும் வழங்கி உள்ளனர். கூகுளின் ஜிமெயிலும் மைக்குரோசாப்டின் அவுட்லூக்கும் தமிழ்ப் பேசுவதைக் கீழே காணலாம்:

Muthu Nedumaran-article-GmailOutlookTamilஏன் தமிழாக வைக்கவேண்டும்?

தன்னார்வ அடிப்படையில் செயலிகளை உருவாக்கும் தமிழ் பேசும் வல்லுனர்கள், தமிழிலும் இடைமுகங்களை வழங்குவது வரவேற்கத்தக்கது என்றாலும் அதில் வியப்பேதும் இல்லை. அவர்களுடைய செயலிகளை அவர்களே தமிழில் பார்த்தாலும் கூட போதும். எண்ணம் நிறைவேறிய மனநிறைவைக் கொள்வார்கள்.

ஆனால் இலட்சக் கணக்கில் (மில்லியன் கணக்கில் 🙂 பொருட்களை உருவாக்கும் பெரியப் பெரிய நிறுவனங்கள் பற்றின் அடிப்படையில் தமிழ் இடைமுகங்களைத் தருவதில்லை. ஆங்கிலம் தெரியாதோரும் அவர்களின் உற்பத்திகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே பல மொழிகளில் இடைமுகங்களைத் தருகிறார்கள். ஆனால் பயனர்கள் இல்லையெனில் பொருட்செலவிட்டு சிறுபான்மை மொழிகளிலும் இடைமுகங்களைத் தரவேண்டும் எனும் அவசியம் அவர்களுக்கு இல்லை.

தமிழர்கள் சிறுபான்மையினர் அல்லர் என்றாலும் தமிழில் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையே இங்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். தமிழ் தெரிந்த அனைவரும் தமிழிலேயே இடைமுகங்கள் இருக்கவேண்டும் எனும் தேர்வை செய்தால் வியக்கத்தக்க விளைவுகளைக் காணலாம்!

– முத்து நெடுமாறன்