கோலாலம்பூர் – நீதிமன்றம், சங்கப் பதிவகம் ஆகியவற்றின் அதிகாரபூர்வ அங்கீகாரத்தோடு, டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தலைமையில் செயல்பட்டு வரும் மஇகாவிற்கு எதிர்ப்பாக, மற்றொரு வழக்கை முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் கடந்த வெள்ளிக்கிழமை (5 பிப்ரவரி 2016) பதிவு செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கினால், மஇகாவில் அரசியல் ரீதியாக மாற்றங்கள் எதுவும் ஏற்படுமா?
மஇகாவில் தலைமைத்துவ மாறுதல்கள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்குமா?
-என்பது போன்ற கேள்விகள் மக்கள் மனங்களில் எழுந்துள்ளது இயல்புதான்!
வழக்கின் சாராம்சம் என்ன?
சட்டத்துக்குப் புறம்பான முறையிலும், ஊழல் முறையிலும் டாக்டர் சுப்ராவும் அவரது அணியினரும் சங்கப் பதிவகத்தை தவறாக வழிநடத்தி, மஇகாவின் தலைமைத்துவத்தைக் கைப்பற்றியுள்ளனர் என்பதை நிரூபிக்க முனைவதுதான் இந்த வழக்கின் சாராம்சம்.
வழக்கைத் தொடுத்தவர்கள் – தங்களின் ஆதரவாளர்களுடன் நீதிமன்றத்தில்….
இந்த வழக்கை வாதிகளாக (Plaintiffs) தொடுத்துள்ளவர்கள் 8 பேர். மஇகாவின் முன்னாள் வியூக இயக்குநர் ஏ.கே.இராமலிங்கம், வி.கணேஷ், டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம், எம்.சத்தியமூர்த்தி, ஜோர்ஜ் அலெக்சாண்டர் பெர்னாண்டஸ், ஆர்.பிரபு, ஆர்.சிதம்பரம் பிள்ளை, டத்தோ எம்.வி.இராஜூ ஆகியோரே அந்த எண்மராவர்.
வழக்கில் பிரதிவாதிகளாக, மஇகா தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரமணியம், நடப்பு உதவித் தலைவர்களான செனட்டர் டத்தோ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், டத்தோ ஜஸ்பால் சிங், டத்தோ டி.மோகன், மஇகா தலைமைச் செயலாளர் அ.சக்திவேல், விக்னேஸ்வரனின் வழக்கறிஞரான ஏ.வசந்தி, சங்கப் பதிவகத்தின் இயக்குநர் முகமட் ராசின் அப்துல்லா, மற்றும் சங்கப் பதிவக அதிகாரி அக்மால் யாஹ்யா, ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.
இந்த வழக்கு குறித்த விவரங்களை முன்நின்று, பத்திரிக்கையாளர்களுக்கு தெரிவித்த வகையிலும், டாக்டர் சுப்ரமணியத்தை கடுமையான வார்த்தைகளால் சாடியிருப்பதன் மூலமும், “இந்த வழக்கின் பின்னணியில் நானும் செயல்படுகின்றேன்” என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கின்றார் டத்தோ ஆர்.இரமணன் (படம்). இவர் மஇகாவின் முன்னாள் பொருளாளர் என்பதோடு, அண்மையில் டாக்டர் சுப்ரமணியத்தால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவராவார்.
பழனிவேல் தரப்புக்கு ஆதரவு தெரிவிக்க நீதிமன்றத்தில் குழுமிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களின் ஆர்ப்பரிப்போடு இந்த வழக்கு நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.
வழக்கினால் மஇகாவில் மாற்றம் ஏற்படுமா?
இந்த வழக்கு குறித்த முழு விவரங்கள் நீதிமன்ற விசாரணையின் போதுதான் வெளிவரும் என்பதாலும் – எதிர்த் தரப்பு தாக்கல் செய்யவிருக்கும் எதிர்வாதங்களை வைத்தும்தான் முடிவாகும் என்பதாலும் –
இப்போதே இந்த வழக்கின் முடிவு குறித்த ஆரூடங்களைச் சொல்வது முறையாகாது.
ஆனால், வழக்கின் அடிப்படையை வைத்துப் பார்க்கும் போது, இந்த வழக்கின் நோக்கம், டாக்டர் சுப்ரமணியத்தைக் களங்கப்படுத்துவதும், அதன் மூலம் அவர் சட்டத்துக்குப் புறம்பான முறையில் மஇகாவின் தேசியத் தலைவரானார் என்பதை நிரூபிப்பதும்தான் என்பது மேலோட்டமாகத் தெரிகின்றது என மஇகா தொடர்பான வழக்குகளைக் கண்காணித்துவரும் சில வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சுப்ரா, சதியாலோசனை மூலம் பழனிவேலுவை வீழ்த்தினார் – ஜனநாயக முறையிலான தேர்தல் வழியில் அல்ல – என்பதை எடுத்துக் காட்டுவதுதான் பழனிவேல் தரப்பினர், இந்தவழக்கின் மூலம் நிறைவேற்றிக் கொள்ளத் துடிக்கும் நோக்கமாகத் தெரிகின்றது.
மாறாக, இந்த வழக்கின் மூலம் மஇகாவில் தலைமைத்துவ மாற்றங்களை ஏற்படுத்துவதோ, குறிப்பாக சுப்ராவை பதவியில் இருந்து வீழ்த்துவதோ முடியாத காரியம் என்பது பழனிவேல் தரப்பினருக்கும் அவர்களின் வழக்கறிஞர்களுக்கும் நன்றாகவே புரிந்திருக்கும்.
எனவே, சுப்ராவை தேசியத் தலைவர் பதவியிலிருந்து வீழ்த்துவது இந்த வழக்கின் நோக்கமல்ல – மாறாக, களங்கப்படுத்துவதுதான் இதன் நோக்கம் என்பது தெளிவாகவே தெரிகின்றது.
இந்த வழக்கு முடியும் போது – தற்போது எழுந்துள்ள பல கேள்விகளுக்கு விடையும் கிடைக்கலாம் – அல்லது கிடைக்காமலேயே வழக்கும் திசை மாறலாம்.
அரசியல் போராட்டங்கள் நீதிமன்ற வழக்குகளால் வெற்றி பெறுவதில்லை என்பது நெடுங்காலமாகக் கூறப்படும் ஒரு தத்துவம். சிறந்த ஆற்றல் மிக்க தலைமைத்துவமும் அதோடு இணைந்த மக்கள் ஆதரவும், மக்கள் போராட்டமும்தான் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது கடந்த கால வரலாறுகள் நமக்கு எடுத்துக் காட்டும் உண்மைகள்!
மஇகா தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படுமா?
இந்த வழக்கின் சாராம்சங்களை வைத்துப் பார்க்கும்போது, வழக்கின் முடிவு பழனிவேல் தரப்பினருக்கு சாதகமாக முடிந்தாலும், அதன்மூலம் மஇகாவில் அரசியல் மாற்றங்களோ, குறிப்பாக தலைமைத்துவ மாற்றங்களோ நிகழ வாய்ப்பில்லை என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இந்த வழக்கின் அடிப்படைக் காரணங்கள், சட்டவிவகாரங்கள் எல்லாம் – அவை உண்மையோ பொய்யோ என்பது ஒரு புறமிருக்க – கடந்த நவம்பர் 6ஆம் தேதி நடைபெற்ற மஇகா கட்சித் தேர்தல்களோடு, மஇகாவுக்கும் சங்கப் பதிவகத்திற்கும் இடையில் நிலவி வந்த விவகாரங்கள் தீர்க்கப்பட்டு விட்டன என்பதுதான் சில சட்ட வல்லுநர்களின் வாதமாகும்.
2015ஆம் ஆண்டில் மறுதேர்தல்களோடு நடைபெற்ற மஇகா பொதுப் பேரவையின்போது நஜிப்புடன் மஇகா தலைவர்கள்…..
அதாவது, மஇகாவுக்கும், சங்கப் பதிவகத்திற்கும் இடையில் நிகழ்ந்த சட்டப் போராட்டங்கள் – சர்ச்சைகள் – கடந்த ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி நடைபெற்ற மஇகா தேர்தல்களோடு முடிவுக்கு வந்து விட்டதால் –
பழைய விவகாரங்கள் எல்லாம் சரியாக இருந்தாலும் – தவறாக இருந்தாலும் அவற்றுக்கு சட்டரீதியாக உயிர்கொடுக்க முடியாது- அவை காலங்கடந்தவைகள் (academic) என்றுதான் நீதிமன்றங்கள் முடிவெடுக்கும்.
கடந்த முறை பழனிவேல் தரப்பினர் தொடுத்த வழக்கிலும் இதே போன்ற தீர்ப்பைத்தான் உச்ச நீதிமன்றமான கூட்டரசு மேல் முறையீட்டு நீதிமன்றமும் வழங்கியது.
எனவே, அப்படியே சங்கப்பதிவகம் தவறுகள் இழைத்திருந்தாலும், நவம்பர் 6ஆம் தேதி முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மஇகா பொறுப்பாளர்களையும், மத்திய செயலவையினரையும், இந்த வழக்கின் மூலம் பதவியில் இருந்து வீழ்த்த முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும்.
அத்துடன் இந்த வழக்கு உரிமையியல் (சிவில்) வழக்குதான் – குற்றவியல் வழக்கல்ல என்பதால் – இதனால், சுப்ரா சிறைக்குச் செல்வார் என்பதெல்லாம், மேடைக்கேற்ற அரசியல் வசனங்களாக இருக்க முடியுமே தவிர, நடைமுறையில் சாத்தியமன்று.
இந்த வழக்கு நடந்து முடிய ஏறத்தாழ இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகலாம். அதற்கு கூடுதலாகவும் ஆகலாம்.
காரணம், சுப்ராவுக்கு எதிரான போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க இந்த வழக்கு ஒன்றுதான் பழனிவேல் தரப்பினருக்கு இருக்கும் அடுத்த ஒரே வழி – வாய்ப்பு என்று பார்க்கும்போது –
மேல் முறையீடுகளின் வழி இந்த வழக்கு கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றம் வரை போராடப்படலாம் என்பதே அனைவரின் கணிப்புமாகும்.
எனவே, அதற்குள் 14வது பொதுத்தேர்தலும் முடிந்து விடும்! ஏன் அடுத்த மஇகா கட்சித் தேர்தல் கூட முடிந்து விட நிறையவே வாய்ப்புகள் உள்ளன,
14வது பொதுத் தேர்தல் நடந்து முடிந்தால், அதன்பிறகு நிறையவே, அரசியல் காட்சி மாற்றங்கள் நிகழும்.
பழனிவேல் தரப்பினரும், 14வது பொதுத் தேர்தலின்போது, தேசிய முன்னணியைத் தொடர்ந்து ஆதரிப்பதா?
அல்லது எதிர்க் கட்சிகள் பக்கம் சாய்வதா? என்ற அரசியல் ரீதியான முடிவுகளை எடுக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
அப்போது இந்த வழக்கின் போக்கும் திசைமாறக் கூடும்!
இப்போதுகூட, பழனிவேல் தரப்பினரின் ஒட்டு மொத்த ஆதரவோடு இந்த வழக்கு தொடுக்கப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது.
உதாரணமாக, பழனிவேல் அணியில் அடுத்த கட்ட தலைவராக – இரண்டாவது நிலையில் வைத்துப் பார்க்கப்பட்ட – டத்தோ எஸ்.சோதிநாதன் (படம்) இந்த வழக்கில் ஒரு வாதியாக சேர்த்துக் கொள்ளப்படாததும் – நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட அன்று காணப்படவில்லை என்பதும் –
இதுவரை இந்த வழக்குக்கு ஆதரவாக எந்த ஓர் அறிக்கையையும் அவர் விடுக்கவில்லை என்பதும் – அவர் பழனிவேல் அணியில் இன்னும் இருக்கின்றாரா அல்லது இந்த வழக்குக்கு ஆதரவு தெரிவிக்கின்றாரா என்பது போன்ற சந்தேகங்களை மஇகா வட்டாரங்களில் எழுப்பியிருக்கின்றது.
எனவே, இன்றைய சூழலை வைத்துப் பார்க்கும்போதும் – எதிர்கால அரசியல் கணிப்புகளை வைத்துப் பார்க்கும்போது – இந்த வழக்கினால் மஇகாவில் உட்கட்சி விவகாரங்களில் எந்தவித மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை – , எந்தவித மஇகா தலைமைத்துவ மாறுதல்களும் நிகழப் போவதில்லை என்பதுதான் –
சட்ட வல்லுநர்களின் – அரசியல் கணிப்பாளர்களின் – பார்வையாகும்!
-இரா.முத்தரசன்