அங்காரா – அங்காராவில் நேற்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்குக் காரணமானவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க துருக்கி முடிவெடுத்துள்ளது.
“எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எந்த சூழலிலும் தன்னை தற்காத்துக் கொள்ளத் தேவையானவற்றைப் பயன்படுத்துவதில் துருக்கி தயக்கம் காட்டாது” என்று துருக்கி அதிபர் ரிகெப் தாயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
நேற்று அந்நாட்டில் இராணுவ பேருந்துகள் அனைத்தும் சக்தி வாய்ந்த வெடிபொருட்களை சுமந்து கொண்டு சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நேற்று நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 28 பேர் பலியாகினர். 61 பேர் காயமடைந்தனர்.
இதனிடையே, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அமைந்திருக்கும் துருக்கி கலாச்சார மையத்தில் நேற்று பிற்பகல் குண்டுவெடிப்பு ஒன்று நிகழ்ந்து அக்கட்டிடத்தை சேதப்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்றாலும், இந்தச் சம்பவத்திற்கும், துருக்கி தலைநகரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது.