சென்னை,மார்ச் 14-தலையில் இடி விழுந்தவன் காலில் பாம்பு கடித்த கதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லை என்றால் இதோ ஒரு உதாரணம்.
மணிரத்னத்தின் கடல் படம் – மணிரத்னம் நீங்கலாக வாங்கிய, விற்ற அனைவருக்கும் பெருத்த நஷ்டத்தை உண்டாக்கியது உலகுக்கே தெரியும். படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய ஜெயமோகன் மட்டும் இரண்டு வாரங்களில் கடல் படத்தின் தெலுங்கு டப்பிங் 96 கோடி ரூபாயை சம்பாதித்ததாக ஏதோ ஒரு இணைய விவரத்தை வைத்து ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.
நேரடி சூப்பர்ஹிட் தெலுங்குப் படமான ஈகா-வே இவ்வளவு வசூல் செய்யவில்லை.
இந்தக் காமெடி ஒருபுறம் இருக்க கடலின் விநியோக உரிமையை 20 கோடிக்கு வாங்கிய மன்னன் பிலிம்சார் படம் 3 கோடி மட்டுமே வசூல் செய்ததால் 17 கோடி ரூபாய் எங்களுக்கு நஷ்டம் என்றும், மணிரத்னம் நஷ்டஈடு தர வேண்டும் எனவும் கோரியிருந்தனர்.
மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸில் ஆர்ப்பாட்டமும் செய்தனர். பிறகு கமிஷனரிடம் புகாரும் அளித்தனர்.
கடல் படத்தை ஒரு வருடம் முன்பே ஜெமினி நிறுவனத்துக்கு விற்றுவிட்டதாகவும், தனக்கும் கடல் படத்தின் வியாபாரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் மணிரத்னம் ஒரு அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் இன்று மெட்ராஸ் டாக்கீஸ் உரிமையாளர்கள் மணிரத்னம், அவரது மனைவி சுஹாசினி சார்பாக நீதிமன்றத்தில் நஷ்டஈடு கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
மன்னன் பிலிம்சார் யார் என்றே எங்களுக்கு தெரியாது, அவர்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, எங்கள் அலுவலகத்தில் அவர்கள் புகுந்து சேதம் ஏற்படுத்தியதால் பொருள் இழப்பும், சமூகத்திலும், திரைத்துறையிலும் இருந்த எங்களின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டிருக்கிறது.
பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறிய மன்னன் பிலிம்சார் மீது நடிவடிக்கை எடுக்க வேண்டும். இழப்பீடாக ஐந்து கோடி தர வேண்டும் என அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருக்கிறது.
பாவம் மன்னன் பிலிம்சார். கடல் என்ற பாடாவதி படத்தை வாங்கியதில் 17 கோடிகள் நஷ்டப்பட்டதோடு மன்னன் பிலிம்சார் யார் என்றே தெரியாத மணிரத்னம் மற்றும் சுஹாசினியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக 5 கோடியை வேறு அழ வேண்டியதிருக்கும், தான் தொடுத்திருக்கும் வழக்கில் மணிரத்னம் வென்றால்!