கோலாலம்பூர், மாரச் 14 – ஈழத்தமிழர்களின் துயர் துடைக்கவும், அவர்களின் வாழ்வைச் சீரமைக்கவும்,அரசு சாரா அமைப்பான தமிழர் பேரவை வகுத்த திட்டங்களுக்கு மலேசிய அரசாங்கம் வழங்கிய 32 லட்சம் வெள்ளி சரியான முறையிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கான சரியான கணக்கும் தங்களிடம் உள்ளதாகவும் தமிழர் பேரவை மலேசியா பெர்ஹாட் அமைப்பினர் கடந்த செவ்வாய்க் கிழமை தமிழ் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கிய விளக்கமளிப்புக் கூட்டத்தில் கூறினர்.
காசோலை ஆறுமுகத்தின் பெயரில் வழங்கப்படவில்லை
அரசால், தமிழர் பேரவை மலேசியா பெர்ஹாட் பெயரில் வழங்கப்பட்ட அந்த 32 லட்சம் வெள்ளிக்கான காசோலையை, பெற்றுக்கொண்டது மட்டுமே அமைப்பின் உறுப்பினர் வழக்கறிஞர் ஆறுமுகம் (படம்) என்று,அமைப்பின் பொருளாளர் கந்தையா சுப்ரமணியம் தெரிவித்தார்.
காசோலையே அவர் பெயரில் வழங்கப்படாதபோது, அவர் எப்படி கையெழுத்திட்டு காசை எடுக்க முடியும் என கந்தையா கேள்வி எழுப்பினார். அவர் மட்டுமல்ல அந்தப்பணத்திலிருந்து சல்லிக்காசை கூட அமைப்பினர் தங்கள் சொந்தச் செலவுக்குப் பயன்படுத்தவில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
வீண் பழி சுமத்தவேண்டாம்
2012 ஜூலை மாதம் வழங்கப்பட்ட காசோலைக்கு, குறைகூறுபவர்கள் மலேசிய நிறுவனங்களின் ஆணையத்திடம் அறிக்கையைப் பெற்று கையிருப்பு 0.00 என்றும்,கணக்கு வரவு செய்யப்படவில்லை என்றும் அறிக்கை விடுவது முற்றிலும் வீண் பழி சுமத்தும் நோக்கம் கொண்டது எனவும் கந்தையா தெரிவித்தார்.
மலேசிய அரசு வழங்கிய பணத்தில், 16லட்சத்து 12 ஆயிரத்து 825 செலவானது போக, எஞ்சிய 15 லட்சத்து 86 ஆயிரத்து 175 வெள்ளி தமிழர் பேரவை மலேசியா பெர்ஹாட் வங்கிக்கணக்கில் உள்ளதாகவும், செலவு செய்த பணத்திற்கு முறையான கணக்கு தங்களிடம் உள்ளதாகவும், அதுவும் தணிக்கைக் குழுவினரால் சரி பார்க்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருவதாகவும் கந்தையா தெரிவித்தார்.
இது போன்ற செயல்களால் ஈழத்தமிழர்களின் மறுவாழ்வுத்திட்டங்களுக்கு குந்தகம் விளைவிக்காமல் ஒத்துழைப்பு நல்குமாறு அனைவரையும் அவர் கேட்டுக்கொண்டார்.