இலங்கை, மார்ச் 14- தான் ஒரு சிங்களவர் என்றும் தன்னை கொல்ல வேண்டாம் என்றும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனின் (படம்) மனைவி வினிதா உரக்கக் குரல் எழுப்பிய போதும், இலங்கை இராணுவ சிறப்புப் படைப்பிரிவின் மேஜர் ஒருவர் அவரைச் சுட்டுக் கொன்றார்.
இதனை நேரில் பார்த்த சாட்சிகள் தன்னிடம் கூறியதாக பிபிசியின் முன்னாள் செய்தியாளர் பிரான்செஸ் ஹரிசன் ‘மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன‘ என்ற தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் மற்றும் ஏனையோர் வெள்ளைக்கொடிகளுடன் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைய முற்பட்டபோது, தாக்கப்பட்டு பின்னர் கொல்லப்பட்டதாக நேரில் பார்த்த சாட்சிகள் கூறினர்.
நான் சிங்களவர், தயவுசெய்து என்னைக் கொல்லாதீர்கள் என்று கூறிய பா.நடேசனின் மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தப் படுகொலைகள் நிகழ்ந்தபோது அதை நேரில் பார்த்த விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களும், பொதுமக்களில் ஒருவரும் இது தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளனர்.
இவர்கள் தற்போது லண்டனில் உள்ளனர்.இலங்கை இராணுவத்தினர் சுட்டுக்கொல்ல முற்பட்டபோது, வினிதா சிங்களத்தில் கத்தினார்.தான் ஒரு சிங்களவர் என்றும் தன்னைக் கொல்ல வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஆனால் சிறப்புப் படைப்பிரிவின் மேஜர் ஒருவர், இப்போது மட்டுமா உனக்கு சிங்களப் பாரம்பரியம் நினைவுக்கு வருகிறது என்று கேட்டவாறே வினிதாவை சுட்டுக் கொன்றார் என்று நேரில் பார்த்த சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.