லண்டன், மார்ச் 14- இந்திய வம்சாவளி மருத்துவரான ‘லிண்டன் டா க்ருஸ்’ லண்டன் மூர்பீல்ட்ஸ் கண் மருத்துவமனையில் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தார்.
இவர் கோவாவின் சலிகோ நகரத்தை சேர்ந்தவராவார். இந்த ஆராய்ச்சிகளில் செயற்கை கண்களைக் கொண்டு பார்வையற்றவர்களுக்கு பார்வை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
கண்ணாடியில் சிறிய வகை வீடியோ கேமராவினை பொருத்தி அதை கண்ணில் ரெட்டினா பகுதியில் சிறிய வகை மின்முனையுடன் கம்பியில்லாமல் இணைப்பதன் மூலம் பார்வை குறைபாடு சரி செய்யமுடியும் என்று இவரது ஆராய்ச்சியின் மூலம் நிரூபணமாக்கியுள்ளார். இந்த தொழில்நுட்பம் அமெரிக்காவில் வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்த செயற்கை கண்களைக் கொண்டு தனது நோயாளிகளில் 75 சதவிகிதத்தினருக்கு சாதாரண எழுத்துக்கள், எண்கள், வார்த்தைகளை படிக்கும் அளவுக்கு பார்வை அளித்துள்ளதாக லிண்டன் கூறியுள்ளார்.
இவர்கள் அனைவரும் பரம்பரை ரெட்டினா நோயினால் பாதிக்கப்பட்டு முழுமையாக பார்வை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த கட்டமாக பார்வையற்றவர்களுக்கு 100 சதவீகித பார்வையை வழங்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.