மாஸ்கோ, ஏப்ரல் 11 – ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவர் மிகவும் ஆபத்தான தலை மாற்று அறுவை சிகிச்சைக்கு தன்னை தயார் படுத்தி வருகிறார்.
ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் வசிக்கும் வேலேரி ஸ்ரிடோனோவ் என்பவர், சிறு வயதிலேயே ‘வேர்டிங் ஹாப்மேன்’ (Werdnig-Hoffman) எனும் மரபு ரீதியான நோயின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நோயின் காரணமாக இவரின் உடல் பகுதி முழுவதும் செயல் இழந்துள்ளது. தலை பகுதி மட்டுமே ஆரோக்கியமாக உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ மாட்டார்கள் என்று கூறப்பட்டு வந்த நிலையில், வேலேரி 30 வயதைக் கடந்துள்ளார். எனினும், அவரது உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகின்றது.
இதனால் கடைசி முயற்சியாக, மிகவும் ஆபத்தான தலை மாற்று அறுவை சிகிச்சைக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். மூளை சாவடைந்து ஆரோக்கியமாக உள்ள உடல் ஒன்றில் அவரின் தலையை பொறுத்தும் முயற்சியே, இந்த தலை மாற்று அறுவை சிகிச்சை.
இதற்காக இத்தாலியை சேர்ந்த, பிரபல அறுவை சிகிச்சை நிபுணரான செர்ஜியோ கனாவேரோவைத் தொடர்பு கொண்டு, தனக்கு தலை மாற்று அறுவை சிகிச்சை செய்ய சம்மதம் பெற்றுள்ளார் வேலேரி.
இதற்கிடையே தலை மாற்று அறுவை சிகிச்சை என்பது மரணத்தை விட மோசமானது என பல முன்னணி மருத்துவ நிபுணர்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் வேலேரி தனது முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த நவீன சகிச்சை முறை உலகிற்கு புதிதல்ல. 45 ஆண்டுகளுக்கு முன்பு குரங்கை வைத்து தலை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் புதிய தலையை உடல் ஏற்றுக்கொள்ள முடியாமல், 8 நாட்களுக்கு பிறகு அந்த குரங்கு இறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.