Home நாடு இன்று தேசிய மருத்துவர்கள் தினம்!

இன்று தேசிய மருத்துவர்கள் தினம்!

1189
0
SHARE
Ad

Doctors Day Oct 10கோலாலம்பூர், அக்டோபர் 10 – இன்று மலேசியாவில் முதன் முறையாக இன்றைய அக்டோபர் 10ஆம் நாள் மருத்துவர்கள் தினமாக சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

உலகில் இயங்கிவரும் பல்வேறு தொழில் நிபுணத்துவ துறைகளில், மனிதகுல சேவையை முன்னிறுத்தி, நேரம், காலம் பார்க்காத அர்ப்பண உணர்வும், தியாகப் பண்பும் கொண்ட துறையென்றால் அது மருத்துவத் துறைதான்.

உயிரைக் காக்கவும், சில சமயங்களில் உயிர்களை இந்த உலகத்துக்கு வெளியே கொண்டு வரவும் மருத்துவர்கள் நடத்தும் போராட்டங்களைப் பற்றி நாம் விளக்க வேண்டிய அவசியமில்லை.

#TamilSchoolmychoice

அதே வேளையில், தங்களின் சொந்த விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கி வைத்து, ஒரே சிந்தனையோடு, அறுவைச் சிகிச்சை போன்ற பணிகளில் மணிக்கணக்காக ஒரே சிந்தனையில் ஈடுபடும் மருத்துவர்களின் தியாகசீலமும், அர்ப்பண உணர்வும் என்றுமே மக்களால் நினைவு கூரப்பட்டும் போற்றப்பட்டும் வந்திருக்கின்றது.

மருத்துவர்களைப் பற்றி அவ்வப்போது, ஆங்காங்கே, எதிர்மறையான கருத்துகள் சில சமயங்களில் எழுந்தாலும், ஒட்டு மொத்தமாக அவர்களின் தொண்டு குறித்த மாறுபட்ட கருத்து யாருக்கும் இருக்காது.

இன்று அக்டோபர் 10ஆம் நாள் முதன் முறையாக மலேசியாவில் மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகின்றது.

டாக்டர் மு.பாலதர்மலிங்கத்தின் வாழ்த்தும் செய்தியும்

Balatharmalingam Drகோலாலம்பூரில் பல்வேறு இந்திய சமூக இயக்கங்களில் ஈடுபாடு காட்டி வரும் மருத்துவரான டாக்டர் மு.பாலதர்மலிங்கம் (படம்) இன்று கொண்டாடப்படும் மருத்துவர்கள் தினம் குறித்து செல்லியல் தகவல் ஊடகத்திடம் தெரிவித்த பிரத்தியேக செய்தியில் “ஒவ்வொரு நாட்டிலும் இன்றைய தினம் தேசிய மருத்துவர்கள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. நாட்டிற்கான அவர்களின் பங்களிப்பை நினைவு கூரும் இந்த கொண்டாட்டம் முதன்முதலாக அமெரிக்காவில் தொடங்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

“மலேசியாவில், பல்வேறு துறைகளில் இந்தியர்கள் வழங்கியுள்ள பங்களிப்பு அபரிதமானது என்றாலும், மருத்துவத் துறைக்கென பல்லாண்டுகளாக இந்திய மருத்துவர்கள் வழங்கி வந்துள்ள சேவைகள் என்றுமே சரித்திரத்தில் பதிக்கப்பட வேண்டிய அம்சமாகும். அரசாங்க மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி விரிவுரையாளர்கள், ஆராய்ச்சிகள் என மருத்துவத்துறையில் பல முனைகளிலும் இந்திய மருத்துவர்கள் ஆற்றி வரும் தொண்டிற்கும், சேவைக்கும் இந்த தருணத்தில் அனைத்து மருத்துவர்கள் சார்பாக, எனது வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்” என டாக்டர் பாலதர்மலிங்கம் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியாவின் இன்று கொண்டாடப்படும் மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை, தனியார் மருத்துவர்களுக்கான கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதன் ஓர் அங்கமாக இன்று ஈப்போவிலுள்ள கிந்தா பேரங்காடியில் இரத்த தான நிகழ்வும், உறுப்பு தான நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் 10 ஏன் தேர்வு செய்யப்பட்டது?

உலகின் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு தினங்களில் மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகின்றது.

மலேசியாவில் கொண்டாடுவதற்கு அக்டோபர் 10 ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது குறித்து மலேசிய தனியார் மருத்துவர்கள் கழகத்தின் தலைவர் டாக்டர் ஸ்டீவன் சௌ விளக்கம் அளித்துள்ளார்.

அக்டோபர் 10ஆம் தேதி என்பது 10:10 என்ற உச்சகட்ட துல்லிதத்தைக் குறிப்பதால், மருத்துவர்களும் ஒவ்வொரு நோயாளிக்கும் தங்களின் முழுமையான கவனத்தையும், சேவையையும் வழங்க வேண்டும் என்ற நோக்கில் இந்த தேதியைத் தாங்கள் தேர்ந்தெடுத்ததாக டாக்டர் ஸ்டீவன் தெரிவித்துள்ளார்.

இன்று கொண்டாடப்படும் மருத்துவர்கள் தினம் குறித்த கூடுதல் விவரங்களை மேலே காணும் இணையத் தளப் பக்கத்தில் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.