இஸ்லாமாபாத், ஏப்ரல் 11 – மும்பை தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான ஜகியுர் ரஹ்மான் லக்வி (55) நேற்று ராவல்பிண்டி சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 2008 நவம்பர் 26-ம் தேதி மும்பையில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி ஜகியூர் ரஹ்மான் லக்வியை தடுப்புக்காவலில் வைத்திருப்பது சட்ட விரோதமானது என்றும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து லக்வி எந்த நேரத்திலும் விடுதலை ஆவார் என்று எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் நேற்று பிற்பகலில் லக்வி விடுதலை செய்யப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தீர்ப்பு தொடர்பாக இந்தியா தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தும், பாகிஸ்தான் அரசு அதனை சட்டை செய்யாமல் தீவிரவாதியை விடுவித்திருப்பது, இந்திய தரப்பில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தவே இந்தியா விரும்புகின்றது. ஆனால், தற்போது லக்வி விடுதலை செய்யப்பட்டு இருப்பது துரதிர்ஷ்டவசமானது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே லக்வி விடுதலை குறித்து அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.