பாரிஸ், ஏப்ரல் 11 – பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நேற்று பாரிஸ் உள்ள யுனெஸ்கோ தலைமை அலுவலகத்தில் உரையாற்றினார். மோடி பேசத்துவங்கிய கணமே கூடியிருந்தவர்கள் ஜெய் ஹிந்த் என குரல் எழுப்பி அவரை பரவசத்தில் ஆழ்த்தினர். பதிலுக்கு வந்தே மாதரம் என்று கூறி மோடி தனது உரையைத் தொடங்கினார்.
“யுனெஸ்கோ தலைமை அலுவலகத்தில் உரை நிகழ்த்துவது எனக்கு பெருமை அளிக்கிறது. உலகை பாதுகாப்பதில் ஐநா-வின் பங்கு மிக முக்கியமானதாகும். அதனை ஐநா வியக்கத்தகும் வகையில் செய்து வருகின்றது. இந்திய கலாச்சாரங்களை பாதுகாப்பதில் யுனெஸ்கோவின் பங்கு பாராட்டுதலுக்குரியது”
“உலகின் பல பாகங்களில் கலாச்சாரம் என்பது பிரச்சனைக்குரிய ஒன்றாக மாறி விட்டது. மக்களுக்கிடையே உயரிய மரியாதையையும், புரிதலையும் உருவாக்குவதில் துணையிருக்க வேண்டிய கலாச்சாரங்கள், பிரிவினைக்கு காரணமாகி விட்டன. அதன் காரணமாக தீவிரவாதமும் பெருகிவிட்டது. அதனை எதிர்கொள்ள நமது கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள் மற்றும் மதங்கள் தொடர்பாக நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.”
“உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் தீவிரவாதம் மாற வேண்டும். இந்த இடத்தில் மகாத்மா காந்தியின் குறிக்கோளான அமைதி – முன்னேற்றத்தை நான் நினைவுபடுத்த விரும்புகின்றேன். அதனை நோக்கியே நாங்கள் பயணிக்கின்றோம். பழங்கால மண்ணில் நவீன இந்தியாவை உருவாக்கியுள்ளோம். அதனை மேலும் மேன்மையடையச் செய்ய வேண்டும் என்பதே எங்களின் குறிக்கோள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.