டேன் டேன், ஏப்ரல் 11 – மொராக்கோவில் நேற்று பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்து, எரிவாயு நிரப்பிய டேங்கர் லாரி மீது மோதி விபத்திற்குள்ளானதில் குழந்தைகள் உட்பட 33 பேர் உயிரிழந்தனர்.
வட ஆப்பிரிக்க நாடுகளின் ஒன்றான மொராக்கோவில் நேற்று காலை சுமார் 7 மணியளவில் பென்ஸ்லிமேன் நகரில் இருந்து மேற்கு சஹாரா பாலைவனப் பகுதியான லாயோன் நோக்கி பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தில் தடகளப் போட்டிகளில் பங்கேற்று விட்டு, மீண்டும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த பள்ளி மாணவ-மாணவிகள் அதிகளவில் இருந்தனர்.
பேருந்து பாலைவன நகரமான டேன் டேனிலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் இருக்கும் ஷ்பைக்கா என்ற பகுதியை நெருங்கிய போது எதிரே வந்த எரிவாயு டேங்கர் லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. பேருந்து மோதிய வேகத்தில் லாரி தீப்பிடித்து எரிந்ததால், அந்த தீ பேருந்திலும் மளமளவெனப் பரவியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 33 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.
மொரக்கோவி சாலைகளும், பாதுகாப்பு வசதிகளும் மிக மோசமான அளவில் உள்ளன என அந்நாட்டு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அவை எந்த அளவிற்கு மோசமாகி உள்ளது என்பதற்கு சிறிய உதாரணம், கடந்த 2013-ம் ஆண்டில் மட்டும் அங்கு சாலை விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 4,000 என்று கூறப்படுகிறது. பல குழந்தைகள் பலியாகி உள்ள இந்த விபத்திற்கு மோசமான சாலை விதிகளே காரணம் என்றும் தெரிய வந்துள்ளது.