Home நாடு நீதிமன்ற அவமதிப்பு : பூச்சோங் முரளிக்கு 1 மாதம் சிறை

நீதிமன்ற அவமதிப்பு : பூச்சோங் முரளிக்கு 1 மாதம் சிறை

1611
0
SHARE
Ad
murali-puchong-
பூச்சோங் முரளி – கோப்புப் படம்

கோலாலம்பூர் – பிகேஆர் கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான பூச்சோங் முரளிக்கு, வழக்கு ஒன்றில் நீதிமன்ற அவமதிப்பு செய்தார் மற்றும் தவறான ஆதாரங்களை நீதிமன்றத்திற்கு வழங்கினார் என்ற காரணங்களுக்காக கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை 1 மாத சிறைத்தண்டனை வழங்கியது.

இந்தத் தீர்ப்பை வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.நந்தபாலன், தொடர்ந்து முரளி பிணைப் பணம் (ஜாமீன் தொகை) 50 ஆயிரம் ரிங்கிட் செலுத்த வேண்டும் என்றும், வழக்கு செலவினங்களுக்காக 20 ஆயிரம் ரிங்கிட் செலுத்த வேண்டும் என்றும் தனது அனைத்துலகக் கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இன்றைய தீர்ப்பு வழங்கப்படும்போது, முரளி நீதிமன்றத்தில் இல்லை. உடல் நலக் குறைவு காரணமாக அவர் சுபாங் ஜெயா மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

nadarajah-tansri-
டான்ஸ்ரீ ஆர்.நடராஜா
#TamilSchoolmychoice

முரளிக்கு எதிராக ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா தொடுத்திருந்த அவதூறு வழக்கில், முரளி அவதூறான கருத்துகளை வெளியிடக் கூடாது என்ற தடையுத்தரவை டான்ஸ்ரீ நடராஜா பெற்றிருந்தார்.

பின்னர் இந்த வழக்கில் டான்ஸ்ரீ நடராஜாவுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டு, அவதூறு மற்றும் வழக்கு செலவினங்கள் என மொத்தம் 347,247 ரிங்கிட் முரளி வழங்க வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

எனினும், தடையுத்தரவு இருந்த காலகட்டத்தில் முரளி தொடர்ந்து தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட கருத்துகள் நீதிமன்றத் தடையுத்தரவை மீறியவையாகும் என்றும் அவர் அத்தகைய கருத்துப் பதிவுகளைத் தொடர்ந்து வெளியிடக் கூடாது எனவும் கடந்த 29 ஜூலை 2016-ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் முரளிக்கு உத்தரவிட்டிருந்தது.

இருப்பினும் தொடர்ந்து முரளி வெளியிட்ட கருத்துகள் காரணமாக அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையில் இந்த வழக்கு தொடர்பில் அவர் தவறான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார் என்ற புகாரும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவற்றைத் தொடர்ந்து, முரளிக்கு எதிராகத் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்தான் இன்று வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.