கோலாலம்பூர் – எதிர்வரும் மார்ச் 27ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் பிரதமர் நஜிப்புக்கு எதிரான கூட்டத்தில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறியுள்ளார்.
“அம்னோ கட்சியைத்தான் நான் எதிர்க்கின்றேன். மாறாக அம்னோ கட்சியினரோடு நான் சுமுகமான உறவையே விரும்புகின்றேன்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
உள்அரங்கில் நடைபெறவிருக்கும் இந்தக் கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் டத்தோ சைட் இப்ராகிம் ஏற்பாடு செய்து வருகின்றார்.
அழைப்பு விடுக்கப்பட்டால் நான் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வேன் என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
அம்னோவில் உருவாகியிருக்கும் எதிர்ப்பாளர்கள் குழுவினரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.
அம்னோ துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மொகிதின் யாசினும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
பாஸ் கட்சியினரோ, ஹாடி அவாங்கோ கலந்து கொள்ளாவிட்டாலும், அந்தக் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற அமானா கட்சியினர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மார்ச் 27 கூட்டத்திற்கு காவல் துறையினரின் அனுமதி கிடைப்பது இன்னும் உறுதிப்படுத்தப்படாவிட்டாலும், நஜிப் பதவி விலக வேண்டும் என போராட்டம் நடத்தி வரும் பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், தனி நபர்களும், அம்னோவினரும் முதன் முறையாக ஒன்றாக, ஒருமித்த கருத்திணக்கத்துடன் இணைவதற்கான களமாக இந்தக் கூட்டம் அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.