சென்னை : எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், யாருடன் கூட்டணி என்பது பற்றி முடிவு செய்ய சென்னை வந்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தேர்தல் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் (படம்), தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்துள்ளார்.
சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து இவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களுடன் பேசிய பிரகாஷ், “நாங்கள் பயனுள்ள விதத்தில் பேச்சு வார்த்தை நடத்தினோம். இது விஜயகாந்துடனான எனது இரண்டாவது சந்திப்பு. பேச்சுவார்த்தைகளின் சாராம்சத்தை நான் பாஜக தலைமைத்துவத்திடம் தெரிவிப்பேன். வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதும் நான் மீண்டும் விஜயகாந்தைச் சந்தித்து கூட்டணி குறித்த ஒரு முடிவுக்கு வருவேன்” என்று கூறினார்.
இந்த வாரத்திலேயே மீண்டும் சந்தித்து ஒரு முடிவுக்கு வரவிருப்பதாகவும் பிரகாஷ் கூறினார்.
தமிழக மக்களுக்கு நரேந்திர மோடியின் மத்திய அரசாங்கம் நிறைய செய்து வருவதாகவும், பல வகைகளிலும் உதவி, நிவாரணத் தொகைகளை வழங்கி வருவதாகவும், ஆனால், தமிழக அரசாங்கம் அது தங்களின் உதவி போலக் காட்டிக் கொள்வதாகவும் பிரகாஷ் கூறினார்.
தமிழகத்திற்கு மோடியின் அரசாங்கம் போல ஓர் ஆட்சி தேவை என்றும், தமிழகத்திற்கு கடந்த 50 ஆண்டுகளாக கிடைத்த அரசியல் தலைமைத்துவத்தை விட மேலும் சிறந்த தலைமைத்துவம் கிடைக்க வேண்டுமெனவும் பிரகாஷ் தெரிவித்தார்.
பாமக உள்ளிட்ட மற்ற கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்கவிருப்பதாகவும் பிரகாஷ் கூறினார்.
ஆனால், ஜெயலலிதாவையும் சந்திப்பாரா என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.