புதுடில்லி – இந்தியாவின் தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்கியது தொடர்பில், அந்நிறுவனம் இந்திய நீதிமன்றத்தில் பிரச்சனைகளை எதிர்நோக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த பங்குக் கொள்முதல் விவகாரத்தில், அந்நிய செலாவணி நிதிப் பரிவர்த்தனை முறைகேடு நடந்ததாக மத்திய அமலாக்கத் துறை தொடுத்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரரும் சன் டிவி குழுமத் தலைவருமான கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி ஆகியோர் எதிர்வரும் ஜூலை 11-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று புதுடில்லி சிபிஐ (சென்ட்ரல் பியூரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்ஸ் – மத்திய புலனாய்வுத் துறை) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசாங்கத் தரப்பில், மத்திய அமுலாக்கத்துறை சமர்ப்பித்துள்ள ஆரம்ப கட்ட ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு தொடுக்கப்படலாம் என நீதிபதி முடிவு செய்துள்ளதை அடுத்து, அனைவரும் எதிர்வரும் ஜூலை 11ஆம் தேதி நீதிமன்றத்திற்கு வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் நால்வர் வெளிநாடுகளில் இருப்பதாகவும் அவர்களும் நீதிமன்றம் வரவேண்டும் என நீதிபதி குறிப்பிடப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, மேக்சிஸ் நிறுவனத்திற்கும் சட்டப் பிரச்சனைகள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேக்சிஸ் நிறுவனமும் மாறன் சகோதரர்களின் ஊழல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற அளவில் விசாரணைகள் தொடர்கின்றன.
அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய அதே ஜூலை 11ஆம் தேதி, மேக்சிஸ் ஏர்செல் பங்குகள் வாங்கிய வழக்கும் விசாரிக்கப்படவிருக்கின்றது.
மேக்சிஸ்-ஏர் செல் வழக்கின் பின்னணி என்ன?
ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்பதில் மாறன் சகோதரர்கள் பின்னணியில் செயல்பட்டிருக்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
ஏர்செல் பங்குகள் வாங்கப்படுவதில் உதவி புரிந்ததற்குப் பிரதிபலனாக, தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சன் டைரக்ட் டிவி நிறுவனத்தில், பல்வேறு நிறுவனங்கள் மூலம் மேக்சிஸ் நிறுவனம் ரூ.742.58 கோடி அளவுக்கு முதலீடு செய்ததாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
இந்தப் பங்குப் பரிவர்த்தனை விவகாரத்தில் மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக – ஏர்செல் பங்குகளை விற்க அதன் உரிமையாளருக்கு நெருக்குதல்கள் தந்ததாக – கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அந்த வழக்கின் அடிப்படையிலேயே நிதிப் பரிவர்த்தனை முறைகேடு வழக்கை மத்திய அமலாக்கத் துறை தொடுத்துள்ளது.
சிபிஐ தொடுத்துள்ள ஏர்செல் பங்குப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் ஆஜராகும் அதே நாளிலேயே, இந்த அமலாக்கத் துறை வழக்கும் சேர்த்து விசாரிக்கப்படும்.