பெங்களூர் – பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து கிளம்பும்போது ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் சக்கரங்களில் ஒன்று கழன்று கீழே விழுந்தது. இருப்பினும் விமானி விமானத்தை கொல்கத்தாவில் பத்திரமாக தரையிறக்கினார்.
ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று 204 பயணிகள், 7 சிப்பந்திகளுடன் செவ்வாய்க்கிழமை பெங்களூரில் இருந்து கொல்கத்தாவுக்கு கிளம்பியது. விமானம் கிளம்பிய வேகத்தில் ஓடுதளத்தில் சக்கரம் ஒன்று கிடந்ததை விமான நிலைய ஊழியர்கள் பார்த்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.
ஓடுதளத்தில் கிடந்தது ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் சக்கரம் தான் என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு விமானிக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
விமானி கொல்கத்தாவில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். விமானத்தின் பின்பக்கம் உள்ள லேண்டிங் கியர் சக்கரங்களில் ஒன்று தான் கழன்று விழுந்தது. சக்கரம் கழன்று விழுந்ததா, வெடித்து விழுந்ததா என்பது விசாரணைக்கு பிறகே தெரிய வரும்.
இது குறித்து ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பெங்களூரில் இருந்து கிளம்பிய எங்கள் விமானத்தின் பின்பக்க சக்கரங்களில் ஒன்று கீழே விழுந்துள்ளது. இருப்பினும் விமானி விமானத்தை பத்திரமாக தரையிறக்கி பயணிகளை காப்பாற்றிவிட்டார் என்றார்.