தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டது. சென்னையில் தி.நகர், திருவல்லிக்கேனி, புரசைவாக்கம், மயிலாப்பூர் உள்பட பல இடங்களில் நகைக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.
இதனால் ரூ.1000 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது. கடை அடைப்பு போராட்டம் குறித்து சென்னை வைரம், தங்கம், வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்தி லால் கூறியதாவது:– மத்திய பட்ஜெட்டில் அறிவித்த தங்க நகை மீதான 1 சதவீத கலால் வரியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
இதை கண்டித்து தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டம் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும்.
மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு 12 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். பொது மக்களின் மீதான கூடுதல் சுமையை தவிர்க்க முன் வர வேண்டும். கலால்வரி சட்டம் மிக கடுமையான சட்டம் அதை நகை தொழில் மீது திணிப்பதை திரும்ப பெற வேண்டும்.
ரூ.2 லட்சத்துக்கு நகை வாங்கும் போது பான் கார்டு கட்டாயம் என்பதை ரத்து செய்ய வேண்டும். நகை வியாபாரிகளின் போராட்டம் இந்தியா முழுவதும் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இதனால் அரசுக்கு தான் பெரும் இழப்பு ஏற்படும் என அவர் கூறினார்.
கோவை மாநகரில் உள்ள நகைக்கடைகள் அனைத்தும் இன்று அடைக்கப்பட்டன. டவுன் ஹால், ராஜவீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு உள்பட மாநகரில் உள்ள 627 நகைக்கடைகள் மூடப்பட்டு இருந்தன. திருப்பூரில் 200 நகைக்கடைகளும், நீலகிரியில் 450 கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.