கோலாலம்பூர் – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை கேள்வி கேட்க முயற்சி செய்த இரு ஆஸ்திரேலிய செய்தியாளர்களை கைது செய்ததற்கு மலேசியாவிலுள்ள பத்திரிகையாளர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய புரோட்காஸ்ட்டிங் கார்ப்பரேஷன் (Australian Broadcasting Corporation) என்ற அந்தத் தகவல் ஊடகத்தின் செய்தியாளர்களான லிண்டன் பெசெர் மற்றும் லூயி எர்குலு ஆகிய இருவரையும் கைது செய்ததற்குப் பதிலாகத் தடுத்து நிறுத்தியிருக்கலாம் என்று மலேசிய வெளிநாட்டு செய்தியாளர்கள் சங்கம் கருத்துத் தெரிவித்துள்ளது.
“இதுவரையில் செய்தியாளர்கள் அரசாங்க அதிகாரிகளைத் தாக்கியதாக செய்திகள் வந்ததே இல்லை. ஆனால் அதற்கு நேர்மாறாகத் தான் இதுவரையில் நடந்துள்ளது”
“தீவிரவாதிகளைக் கையாளுவது போல் பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் செய்தியாளர்களிடம் காவல்துறையினர் நடந்து கொள்கின்றனர்” என்றும் மலேசிய வெளிநாட்டு செய்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, கெராக்கான் மீடியா மாரா (கெராம்) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தக் கைது நடவடிக்கை மலேசியாவில் பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் என வர்ணித்துள்ளது.
பதவியேற்றதில் இருந்து பிரதமர் நஜிப் செய்தியாளர் சந்திப்பை அவ்வளவாக நடத்துவதே இல்லை என்று குற்றம் சாட்டும் அந்த அமைப்பு, அப்படியே நடத்தினாலும் எல்லா பத்திரிகைகளையும் அழைப்பதில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவும் இந்தக் கைது நடவடிக்கை குறித்து மலேசியாவிடம் விளக்கம் கேட்டுள்ளதாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப் இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார்.