ஹைதராபாத் – காசோலை மோசடி வழக்கில் பிரபல தொழிலபதிர் விஜய் மல்லைய்யாவுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத கைது உத்தரவை ஹைதராபாத் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
ஹைதராபாத் அனைத்துலக விமான நிலையத்தைக் கட்டிய பிரபல தொழில் கட்டமைப்பு நிறுவனமான ஜி.எம்.ஆர். நிறுவனம், கிங்ஃபிஷர் நிறுவன இயக்குநரும், பிரபல தொழிலபதிருமான விஜய் மல்லைய்யா மீது நீதிமன்றத்தில் காசோலை மோசடி புகார் அளித்தது.
இதுதொடர்பான வழக்கு ஹைதராபாத் பெருநகர கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், கடந்த மார்ச் 10-ஆம் தேதி விஜய் மல்லைய்யா மற்றும் கிங்ஃபிஷர் நிறுவன உயரதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஹைதராபாத் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
ஆனால், கடந்த 2-ஆம் தேதியே விஜய் மல்லைய்யா ரகசியமாக இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு சென்றுவிட்டார். மேலும், தற்போது இந்தியாவுக்கு வருவதற்கான தருணம் சரியாக இல்லை என்பதால், நேரில் ஆஜராக முடியவில்லை என விஜய் மல்லைய்யாவின் வழக்கறிஞர் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, விஜய் மல்லைய்யா மற்றும் கிங் ஃபிஷர் நிறுவன உயரதிகாரிகளுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத கைது உத்தரவை பிறப்பித்து உத்தரவிட்ட ஹைதராபாத் நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
ஆனால், ஹைதராபாத் பெருநகர நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக விஜய் மல்லைய்யாவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.