புதுடெல்லி – மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கல்வித்தகுதி குறித்த ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கும், டெல்லி பல்கலைக் கழகத்துக்கும் டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி 2004, 2011, 2014 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களின்போது தாக்கல் செய்த பத்திரங்களில் தனது கல்வித்தகுதி தொடர்பாக பொய்யான தகவல்களை தெரிவித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
2004-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது தேர்தல் ஆணையத்திடம் ஸ்மிருதி இரானி தாக்கல் செய்த பத்திரத்தில், டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ. இளங்கலை பட்டம் படித்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
2011-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட போது, டெல்லி பல்கலைக்கழகத்தில் தபால் வழியில் பி.காம் படித்ததாக கூறியிருந்தார். ஆனால், கடந்த 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது, டெல்லி பல்கலைக்கழகத்தின் திறந்த நிலைப் பிரிவில் பி.காம் படித்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
இது நாடு தழுவிய அளவில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. மேலும் தேர்தல் ஆணையத்திடம் பொய்யான தகவல்களை தெரிவித்ததாக ஸ்மிருதி இரானிக்கு எதிராக வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது. இந்த வழக்கு டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி ஹர்விந்தர் சிங் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கின் நேற்றைய விசாரணையின் போது நீதிபதி ஹர்விந்தர் சிங் கூறியதாவது: நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுப்படி, ஸ்மிருதி இரானி கல்வித் தகுதி தொடர்பாக முழு ஆவணங்களையும் தேர்தல் ஆணையமும், டெல்லி பல்கலைக்கழகமும் தாக்கல் செய்யவில்லை.
ஆகையால், வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணையை மே மாதம் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன். அப்போது அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கும், டெல்லி பல்கலைக்கழகத்துக்கும் உத்தரவிடுகிறேன் என்றார் நீதிபதி.