சென்னை – பாஜக கூட்டணிக்கு சென்ற வேகத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அதிமுக கூட்டணிக்கே திரும்பி வந்துள்ளார். அதிமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணிக்கு சென்ற சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை சந்திக்க போயஸ் கார்டன் சென்றார்.
அங்கு அவர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் சேர்ந்துள்ளது என்றார். பாஜக தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்து தோற்றுவிட்டது.
இந்நிலையில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி சேரலாம் என்ற சூழல் உருவாகியுள்ள நிலையில், சரத்குமார் அதிமுக கூட்டணியில் சேர்ந்துள்ளார். அதிமுக கூட்டணியில் இடம் பிடித்து இரண்டு சட்டமன்ற உறுப்பினருடன் வலம் வந்த சரத்குமார், ஆரம்பத்தில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார். பின்னர் ஜெயலலிதா சரத்குமாரை ஒதுக்க ஆரம்பித்தார்.
நடிகர் சங்க தேர்தலின்போது ஜெயலலிதா சரத்குமாரை சுத்தமாக கண்டுகொள்ளவில்லை. இதனால் சரத்குமார் அதிருப்தி அடைந்தார். இந்நிலையில் சரத்குமார் கட்சியின் மற்றொரு சட்டமன்ற உறுப்பினரான எர்ணாவூர் நாராயணன் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். மேலும் கட்சி நிர்வாகிகள் பலரும் விலகினர்.
அதிமுக கூட்டணி தர்மத்தை மதிக்கவில்லை என்றும், தன்னை கறிவேப்பிலை போன்று பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறி சரத்குமார் அந்த கூட்டணியில் இருந்து விலகினார். தற்போது போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்து கூட்டணி குறித்துபேசி அதிமுகாவில் இணைந்துள்ளார் சரத்குமார்.