ஷா ஆலாம் – இன்று இங்கு நடைபெற்ற மக்கள் காங்கிரஸ் மாநாட்டில் நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்ட நஜிப்பின் பதவி விலகலுக்கு அறைகூவல் விடுத்தனர்.
மக்கள் காங்கிரஸ் மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றும் சைட் இப்ராகிம்….
இந்த மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றிய சைட் இப்ராகிம், “இனியும் மக்கள் பொறுத்திருக்க முடியாது. நாட்டின் அரசியல் அமைப்பு முறையில் முழுவதுமாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு முதல் கட்டமாக நஜிப் பிரதமர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். நஜிப்பைத் தூக்கி எறிவதன் மூலம் நடந்த தவறுகளை அவருக்குத் துணையாக இருந்து மூடி மறைத்த மற்ற தலைவர்களையும் அகற்ற முடியும்” என முழங்கினார்.
“இப்போதைய தலைவர்கள் ஊழலை ஒழிக்க வேண்டும் என்றும் இஸ்லாமுக்காகப் போராடுவதாகவும் கூறுகின்றார்கள். ஆனால் உண்மையில் ஊழல் நடவடிக்கைகளில் அவர்கள் சொகுசாக இருக்கின்றார்கள். ஆனால் மக்களோ பிரச்சனைகளோடு போராட்ட வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். தலைவர்கள் ஊழல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்தால், நாட்டின் செல்வம் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட முடியாது” என்றும் சைட் இப்ராகிம் கூறினார்.
இன்றைய மாநாட்டு மேடையில் மொகிதின் யாசின், மகாதீர், சைட் இப்ராகிம், அஸ்மின் அலி….
தலைவர்கள் வெளிப்படைத் தன்மையுடனும், நேர்மையுடனும் செயலாற்ற வேண்டும், இல்லாவிட்டால் மலாய்க்காரர்களுக்கோ அல்லது முஸ்லீம்களுக்கோ, யாருக்கும் எந்தவித திட்டத்தையும் செயல்படுத்த முடியாது எனவும் சைட் இப்ராகிம் வலியுறுத்தினார்.
கடந்த மார்ச் 4ஆம் தேதி மகாதீர் அறிவித்த பொதுமக்கள் பிரகடனத்தைத் தொடர்ந்து இன்றைக்கு இந்த காங்கிரஸ் ராயாட் எனப்படும் மக்கள் காங்கிரஸ் மாநாடு நடத்தப்பட்டது.
நன்றி: டுவிட்டர் (படங்கள்)