மும்பை – கிறிஸ்துவர்களின் மதகுருவான போப்பாண்டவர் பெயரை குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய கருத்தினைத் தெரிவித்த பிரபல பாலிவுட் நடிகரான ஹிருத்திக் ரோஷனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக, “நான் எந்த பெண்ணுடன் தொடர்புபடுத்தி பேசப்படுகிறேனோ, அந்த பெண்ணை விட போப்பாண்டவரை அதிகம் நேசிக்கிறேன்” என்று ஹிருத்திக் ரோஷன் கூறியிருந்தார். ரித்திக் ரோஷனின் இந்த கருத்துக்கு கிறிஸ்தவர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிர சிறுபான்மையினர் ஆணைய முன்னாள் துணை தலைவர் ஆபிரகாம் மத்தாய், நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், “போப் ஆண்டவர் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து இருப்பதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத உணர்வுக்கு நீங்கள் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளீர்கள்.
உங்களது கருத்தால் நானும் பாதிக்கப்பட்டு உள்ளேன். போப் ஆண்டவரின் கவுரவத்துக்கு சவால் விடுக்கப்பட்டு உள்ளது. எனவே, எனது நோட்டீசுக்கு பதிலளிக்கும் வகையில் 7 நாட்களுக்குள் நீங்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
இல்லாவிட்டால் உங்கள் மீது வழக்கு தொடரப்படும்” என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வர ஹிருத்திக் ரோஷன் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.