கோலாலம்பூர் – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு மாநிலத்தின் பிளவில்லாத ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், ‘கெடா பிரகடனத்தை’ இன்று அறிவித்தார் கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அகமட் பாஷா மொகமட் ஹனிபா.
எதிர்கட்சிகளுடன் இணைந்து முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் ஏற்படுத்தியுள்ள மக்கள் பிரகடனத்திற்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அகமட் பாஷா குறிப்பிட்டுள்ளார்.
“நாங்கள் துன் மகாதீர் மீது மிகவும் அதிருப்தியில் இருக்கின்றோம். ஜசெக, பிகேஆர், அமனா ஆகிய கட்சிகளுடன் இணைந்து கொண்டு நஜிப்பை பிரதமர் பதவியிலிருந்து விலக்க முயற்சி செய்து வருகின்றார். அவரது செயலுக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கின்றோம்”
“அதே வேளையில், அம்னோ இன்னும் பதவி வகித்துக் கொண்டே நஜிப்பின் எதிரான பிரகடனத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் அம்னோ தலைவர்கள் குறிப்பாக முன்னாள் துணைப்பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மற்றும் முன்னாள் கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் ஆகியோரையும் இந்தப் பிரகடனம் வாயிலாகக் கடுமையாக விமர்சிக்கின்றோம்” என்று அகமட் பாஷா கூறியுள்ளார்.
மேலும், கெடாவைச் சேர்ந்த அம்னோ தொகுதித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள், அம்னோ செனட்டர்கள், இளைஞர் பிரிவு, மகளிர் பிரிவு ஆகியவற்றுடன் கலந்தாலோசித்த பிறகே ‘கெடா பிரகடனம்’ அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அகமட் பாஷா தெரிவித்துள்ளார்.
கெடாவின் ஆதரவு பிரதமர் நஜிப்புக்குத் தான் என்பதை மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
படம்: நன்றி (Bernama)