சென்னை – ஜி.கே.வாசன் தலைமையேற்றுள்ள தமிழ் மாநிலக் காங்கிரஸ் அதிமுக கூட்டணியில் இணையும் என்றும், அந்தக் கட்சிக்கு 15 தொகுதிகள் ஒதுக்க ஜெயலலிதா முன்வந்துள்ளார் என்றும் தகவல்கள் வரத் தொடங்கியுள்ளன.
இரண்டு தரப்புக்கும் வேண்டிய ஒரு மூத்த பத்திரிக்கையாளரின் தீவிர முயற்சியாலும், அரசியல் வியூகமாகவும், வாசனை இணைத்துக் கொள்ள ஜெயலலிதா முடிவு செய்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
அந்தப் பத்திரிக்கையாளர் துக்ளக் ஆசிரியர் சோ என்றும் ஆரூடங்கள் கூறப்படுகின்றது. வாசனின் மறைந்த தந்தையார் மூப்பனாருடனும் நெருக்கம் பாராட்டியவர் சோ என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மாநிலக் காங்கிரசுக்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்த அறிமுக விழாவில் தமிழ் மாநிலக் காங்கிரஸ் தலைவர்கள்….
வாசனை சேர்த்துக் கொள்வதன் மூலம் காங்கிரசிலிருந்து பிரிந்து வந்த அவரை, திமுகவுடன் இணைந்துள்ள காங்கிரசுக்கு எதிராகக் களமிறக்கி அரசியல் நடத்தலாம் என்பது ஜெயலலிதாவின் வியூகமாக இருக்கலாம்.
இது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்றும் வாசன் இன்று ஜெயலலிதாவைச் சந்திக்கக் கூடும் என்றும் தகவல் ஊடகங்கள் கணித்துள்ளன.
இதைத் தொடர்ந்து தமிழ் மாநிலக் காங்கிரஸ் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுமா அல்லது அந்தக் கட்சிக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு சொந்த சின்னத்திலேயே போட்டியிடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.