கோலாலம்பூர் – அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் டத்தோ ஆண்டனி கெவின் மொராயிஸ் கொலை வழக்கு விசாரணை நேற்று முதல் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
மொராயிசைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 பேரில், எஸ்.ரவிச்சந்திரன் என்பவர் தனது உயிருக்கு ஆபத்து என்றும், தன்னை கழுத்தை அறுத்துக் கொள்வேன் என்று ஒருவர் கூறியதாகம் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
“நேற்று, மதிய உணவு இடைவேளையில், வந்திருந்த சாட்சிகளில் ஒருவர் அவரை மிரட்டியுள்ளார். கழுத்தை வெட்டிக் கொலை செய்வேன் என்று அவரிடம் சைகை காட்டியுள்ளார்” என்று ரவிச்சந்திரனின் வழக்கறிஞர் வி.ராஜகோபால் உயர்நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
அதனைக் கேட்ட நீதிபதி அஸ்மான் அப்துல்லா, அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் அப்துல் ரசாக் மூசாவின் உதவியோடு, ரவிச்சந்திரனை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் அளிக்குமாறு ராஜகோபாலிடம் தெரிவித்துள்ளார்.
நேற்று புதன்கிழமை தொடங்கிய கெவின் மொராயிஸ் கொலை வழக்கு விசாரணையில், முதல் சாட்சியாக அவரது சகோதரர் டத்தோ ரிச்சர்டு மொராயிசிடம் நீதிமன்றம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.