கோலாலம்பூர்: நான்கு அதிகார விதிமீறல் குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
எனினும் அந்தத் தீர்ப்பை எதிர்த்து சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் (அட்டர்னி ஜெனரல்) மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்துள்ளது.
அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் டத்தோ வான் ஷஹாருடின் வான் லாடின் செய்தியாளர்களிடம் பேசுகையில், மேல்முறையீட்டு முன்னறிவிப்பு (நோட்டீஸ்) தாக்கல் செய்ய அரசுத் தரப்புக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடு செவ்வாய்கிழமை (ஆகஸ்ட் 15) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டத்துறை தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
75 வயதான மொகிதின் யாசின், பணமோசடி மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நிதியுதவி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் வருவாய் சட்டம் 2001 இன் கீழ் RM200 மில்லியனை உள்ளடக்கிய பணமோசடி தொடர்பான மேலும் மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.