Home Featured உலகம் அமெரிக்க அதிபர் தேர்தல்: பெர்னி சாண்டர்ஸ் தொடர்ந்து 7–ஆவது வெற்றி; ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சி!

அமெரிக்க அதிபர் தேர்தல்: பெர்னி சாண்டர்ஸ் தொடர்ந்து 7–ஆவது வெற்றி; ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சி!

575
0
SHARE
Ad

US-presidential-candidateவாஷிங்டன் – அமெரிக்க அதிபர் பதவிக்கான ஜனநாயக கட்சி வேட்பாளர் போட்டியில் பெர்னி சாண்டர்ஸ் தொடர்ந்து 7–ஆவது வெற்றியை பெற்றுள்ளார். இது ஹிலாரி கிளிண்டனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒபாமாவின் பதவிக்காலம் முடிய உள்ளதால், அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் மாதம் 8–ஆம் தேதி நடக்க உள்ளது. அங்கு பல்வேறு மாகாணங்களில் தொடர்ந்து ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் நடந்து வருகின்றன.

நேற்று முன்தினம் வயோமிங் மாகாணத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தல் நடந்தது. இதில் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி பெர்னி சாண்டர்ஸ் (வயது 74) வெற்றி பெற்றார். இந்த வெற்றி, பெர்னி சாண்டர்ஸ் கடைசியாக சந்தித்த 8 தேர்தல்களில் 7–ஆவது வெற்றியாக அமைந்துள்ளது.

#TamilSchoolmychoice

பிரதிநிதிகள் வாக்கு அடிப்படையில் தற்போது முன்னணியில் உள்ள ஹிலாரி கிளிண்டனுக்கு பெர்னி சாண்டர்சின் தொடர் வெற்றி அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.

இந்த தேர்தல் வெற்றி குறித்து நியூயார்க் அருகேயுள்ள குயின்ஸ் நகரில் பெர்னி சாண்டர்ஸ் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘‘வயோமிங்கில் வெற்றி பெற்றிருக்கிறோம். வேட்பாளராக தேர்வு பெறுவதற்கான உத்வேகம் கிடைத்திருக்கிறது. நாம் வேகமாக நெருங்கிக்கொண்டிருக்கிறோம்’’ என கூறினார்.

ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆவதற்கு 2,383 பிரதிநிதிகள் ஓட்டுக்களை பெற்றாக வேண்டும். ஹிலாரி கிளிண்டன் தற்போது 1,749 பிரதிநிதிகள் ஓட்டுக்களை பெற்று முன்னிலை வகிக்கிறார். அவரது போட்டியாளராக உருவாகி வருகிற பெர்னி சாண்டர்ஸ் 1,061 பிரதிநிதிகள் வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.

வரும் 19–ஆம் தேதி நியூயார்க் மாகாணத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தல் நடக்க உள்ளது. அதைத் தொடர்ந்து 26–ஆம் தேதி பென்சில்வேனியா, கனெக்டிகட், டெலாவேர், மேரிலாந்து, ரோட் தீவு ஆகிய மாகாணங்களிலும் ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தல் முடிவுகளை ஹிலாரி கிளிண்டனும், பெர்னி சாண்டர்சும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.