கோலாலம்பூர் – சிறையில் இருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு மிகவும் வயதாகிவிட்டதால், அவர் பிரதமராக பதவி ஏற்க இயலாது என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்துள்ளார்.
‘தி ஆஸ்திரேலியன்’ பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில், “எனக்கு 70 வயதாக இருந்த போதே, 80 வயதில் என்னால் பிரதமராக இருக்க முடியாது என்று அறிவித்தேன். அதனால், நான் பதவி விலகப் போகிறேன் என்று 80 வயதாவதற்கு முன்பே கூறிவிட்டேன்” என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.
எனினும், “ஒருவேளை மக்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தால், வேறொன்றும் சொல்வதற்கு இல்லை” என்றும் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.
நடப்பு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பதவி விலகும் பட்சத்தில், அடுத்ததாக அன்வார் பிரதமராகும் வாய்ப்பிருக்கின்றதா? என்ற கேள்விக்கு மகாதீர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.