Home Featured நாடு பிரதமரின் பத்திரிகை செயலாளருக்கு எதிராக முக்ரிஸ் வழக்கு!

பிரதமரின் பத்திரிகை செயலாளருக்கு எதிராக முக்ரிஸ் வழக்கு!

984
0
SHARE
Ad

mukrizகோலாலம்பூர் – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் பத்திரிகை செயலாளர் தெங்கு ஷரிபுடின் தெங்கு அகமட்டுக்கு எதிராக இன்று, அவதூறு வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளார் முன்னாள் கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர்.

கடந்த ஏப்ரல் 15 மற்றும் 26 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட தேதிகளில் தெங்கு ஷரிபுடின் வெளியிட்ட 4 பத்திரிகை அறிக்கைகளின் தொடர்பில், ஹனிப் கத்ரி அண்ட் கோ என்ற சட்ட நிறுவனம் ஒன்றின் மூலமாக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் கெடா மந்திரி பெசாரான முக்ரிஸ், தனது தந்தையும், முன்னாள் பிரதமருமான டாக்டர் மகாதீர் மொகமட் மற்றும் முன்னாள் துணைப்பிரதமர் மொகிதின் யாசின் ஆகியோருடன் இணைந்து அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சி செய்வதாக அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

நஜிப்புக்கு அடுத்து மொகிதின் பிரதமர் பதவி ஏற்று, அவர் பதவிக் காலம் நிறைவு பெற்ற பிறகு முக்ரிசுக்கு அப்பதவி வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கை கூறுவதாக முக்ரிஸ் தெரிவித்துள்ளார்.

பதவிக்காக முக்ரிஸ் அலைவதாகவும், பிரதமராக பதவி வகிக்கும் தனது கனவிற்காக, ஜனநாயக முறைக்கு எதிராக ஏமாற்றுவேலைகளை செய்வது உட்பட எதையும் செய்வார் என்றும் தெங்கு ஷரிபுடின் ஒரு கண்ணோட்டத்தை உருவாக்கியுள்ளதாகவும் முக்ரிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், தன் மீதான அபாண்டமான குற்றச்சாட்டுகள் மற்றும் அதனால் தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் ஆராயுமாறு நீதிமன்றத்தை நாடியுள்ள முக்ரிஸ், அது போன்ற பத்திரிகை அறிக்கைகளை தெங்கு ஷரிபுடின் இனி வெளியிடாத படி அவருக்கு தடை விதிக்கும் படியும் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.