சென்னை – தமிழகத்தில் ஊழல் பெருகிவிட்டது. அதனால் ஆட்சியை மாற்ற வேண்டும் என்று மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பல்வேறு கூட்டங்களில் பேச திட்டமிட்டுள்ளார்.
அதன் ஒரு கட்டமாக பிரதமர் மோடி நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசினார். அதன்பின், சென்னை நந்தனம் ஓய்எம்சிஏ மைதானத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார்.
அப்போது மோடி பேசியதாவது: தமிழகத்தில் ஊழல் பெருகிவிட்டது. உங்களுக்கு எந்த நன்மையும், இங்குள்ள அரசால் கிடைக்கவில்லை. சென்னை வெள்ளத்தால் பாதித்த போது, மத்திய அரசால் மீட்பு பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டன.
நான் உங்களுக்காக சென்னைக்கு ஓடோடி வந்தேன். தமிழ்நாட்டை யார் காப்பாற்ற போகிறார்கள் என்பதற்காக தான், இந்த தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில் லஞ்சம் தலை விரித்தாடுகிறது. அதனால் ஊழல் நிறைந்த இந்த ஆட்சியை மாற்ற வேண்டும்.
தமிழக மக்கள் மிகவும் சிந்தித்து, தமிழகத்தின் எதிர்காலத்தை மாற்ற உறுதியான சிந்தனையோடு இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. தமிழகத்தில் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக இளைஞர்களின் எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டிய தருணம் இது.
இலங்கையில் இருக்கும் தமிழ் சகோதரர்கள் நிலையை எண்ணிப் பார்த்தால் கவலைக்கிடமாக இருந்தது. அவர்களின் துன்பத்தை போக்க இலங்கையுடன் நல்லுறவை ஏற்படுத்தி யாழ்ப்பாணம் போன முதல் பிரதமர் நான் தான்.
எடைபோட்டு பாருங்கள். மக்களுக்காக சட்டத்தின் படி உயிரோட்டமான மத்திய அரசு செயல்படுகிறது என்பதை எடுத்து சொல்லத் தான் இந்த விஷயங்களை சொன்னேன். இப்போது நீங்கள் முடிவு செய்ய வேண்டும்.
உங்களை வாழ வைக்கக் கூடிய அரசு வேண்டுமா? அல்லது வீழ்ச்சியடைக்கூடிய அரசு வேண்டுமா? சிந்தித்து செயல்படுங்கள் என பிரதமர் மோடி பேசினார்.