கோலாலம்பூர் – சரவாக் ஹெலிகாப்டர் விபத்தில் சுங்கை பெசார் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ நோரியா காஸ்னோன் மரணமடைந்தது உறுதியாகிவிட்ட நிலையில், அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
காரணம், கடந்த 2013-ம் ஆண்டு 13-வது நாடாளுமன்றம் அமைக்கப்பட்ட போது, ஜூன் 24-ம் தேதி தான், 222 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
மலேசிய அரசியலமைப்பின் படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்று மூன்று ஆண்டுகள் முழுவதுமாக நிறைவடைந்துவிட்டால் இடைத்தேர்தல் நடத்தப்படத் தேவையில்லை.
ஆனால், தற்போதைய சூழ்நிலையில், வரும் ஜூன் 24-ம் தேதிக்குப் பிறகு தான் மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றது.
மலேசிய அரசியலமைப்பு ஆர்ட்டிக்கில் 54 கிளாஸ் 1-ன் படி, நாடாளுமன்றத்தில் இயல்பாக நாடாளுமன்ற உறுப்பினரின் பதவி காலியாகும் பட்சத்தில், 60 நாட்களுக்குள் அப்பதவிக்கு புதிய நாடாளுமன்ற உறுப்பினரை தேர்தல் ஆணையம் கொண்டு வர வேண்டும் என்று கூறுவதாக கூட்டரசு அரசியலமைப்பு மூத்த அரசியலமைப்பு நிபுணர் பேராசிரியர் டத்தோ டாக்டர் ஷாத் சலீம் பரூகி ‘ஸ்டார்’ இணையதளத்திடம் தெரிவித்துள்ளார்.
“எனவே, அந்த இடம் காலியாக உள்ளதா? என்பது தேர்தல் ஆணையத்தின் முடிவில் தான் உள்ளது. நாடாளுமன்ற சபாநாயகரின் அறிவிப்பை வைத்து அது நடவடிக்கைகளை மேற்கொள்ளும்” என்றும் டாக்டர் ஷாத் தெரிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்ற கலைக்கப்படும் இரண்டு ஆண்டுகளுக்குள் நாடாளுமன்றத்தில் காலியிடம் ஏற்பட்டால், இடைத்தேர்தல் நடத்தப்படத் தேவையில்லை என்று கூறிய ஷாத், தற்போதைய சூழ்நிலையில், ஜூன் மாதம் 24-ம் தேதி தான் மூன்றாண்டுகள் நிறைவடைந்து, அடுத்த இரண்டு ஆண்டுகள் காலம் தொடங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை, சுங்கை பெசார் நாடாளுமன்ற உறுப்பினரும், தோட்டத் தொழில் துறை மற்றும் மூலப் பொருள் துறையின் துணையமைச்சருமான டத்தோ நோரியா காஸ்னோன், அந்த அமைச்சின் பொதுச்செயலாளர் டத்தோ டாக்டர் சுந்தரன் அண்ணாமலை, கோல கங்சார் நாடாளுமன்ற உறுப்பினரும் மலேசிய பனை எண்ணெய் வாரியத்தின் தலைவருமான டத்தோ வான் மொகமட் கைர் இல் அனுவார், அவரது மெய்க்காப்பாளர் அகமட் சோப்ரி ஹாருன் ஆகியோர் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.
இதுவரை, ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்களும், துணையமைச்சர் டத்தோ நோரியாவின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ளவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் பல பாகங்களாக உடைந்து நொறுங்கியிருப்பதால், இந்தச் சம்பவத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்று மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2013-ம் ஆண்டு தேர்தலில் சுங்கை பெசார் தொகுதியில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஸ் வேட்பாளர் மொகமட் சாலே எம் ஹுசைனை விட 399 வாக்குகள் பெரும்பான்மையில் நோரியா வெற்றி பெற்றார்.
அதேவேளையில், கோல கங்சார் தொகுதியில் போட்டியிட்ட வான் மொகமட் கைர் இல் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் கமீலா இப்ராகிமை விட 1,082 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.