கோலாலம்பூர் – கடந்த ஆண்டு அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் ஜமாலுடின் ஜார்ஜிஸ் உட்பட 6 பேர் பலியாகக் காரணமாக இருந்த ஹெலிகாப்டர் விபத்திற்கு, விமானியின் அலட்சியம் ஒரு காரணமாக இருந்துள்ளதாக விபத்து ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.
மலேசிய வான் விபத்து விசாரணைக் குழு வெளியிட்டுள்ள 117 பக்கங்கள் கொண்ட அறிக்கையில், விமானி கிலிப்போர்டு பார்னியர், ஹெலிகாப்டரில் இருந்த அளவுக்கதிகமான எண்ணெய் கசிவையும், சேதாரங்களையும் சரியாகக் கவனிக்காமல் விட்டுவிட்டதாகக் கூறுகின்றது.
விபத்து நடப்பதற்கு முன்னதாக, பகாங், முவாட்சாம் ஷாவிலுள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் அந்த ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறங்கிய போதே எண்ணெய் கசிவையும், அதனால் ஏற்பட்ட சேதாரங்களையும் கவனித்திருக்க வேண்டும் என்று அந்த அறிக்கைக் கூறுகின்றது.
மேலும், ஹெலிகாப்டரின் பாகம் ஒன்று சேதமடைந்திருப்பது தெரிந்தும், மூன்று தரையிறங்கும் கியர்கள் கீழே நீட்டிக்கப்பட்ட நிலையிலேயே, பார்னியர் சுபாங் விமான நிலையம் வரை, ஹெலிகாப்டரை இயக்க முடிவெடுத்ததாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.